4,000 மாணவர்களிடையே தேர்தல் கடித போட்டி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் கடந்த மூன்று மாதங்களாகவே நடக்கின்றன. குறிப்பாக, தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.இதனால், காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள், பல வகையில் தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக, பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவ - மாணவியர் வாயிலாக, தேர்தல் விழிப்புணர்வு கடிதம் எழுதும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.தேர்வு செய்யப்பட்ட 40 பள்ளி, கல்லுாரிகளில், தலா 100 அஞ்சல் கடிதங்கள் என, 4,000 கடிதங்களை தேர்தல் அதிகாரிகள் வழங்கியுள்ளனர். மாணவர்கள், தேர்தலில் ஓட்டளிப்பதன் முக்கியத்துவம், வாக்காளர் கடமை போன்ற பிரிவுகளில், மாவட்ட கலெக்டருக்கு, கட்டுரை வடிவில் கடிதம் எழுதி வருகின்றனர்.மாணவர்கள் அனைவரும் எழுதி முடித்தவுடன், தேர்தல் பிரிவு அதிகாரிகள் வாயிலாக, தபால் நிலையங்களில் கடிதங்கள் கொடுக்கப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தில் அந்த கடிதங்கள் பெறப்படும்.இதையடுத்து, சிறந்த கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு, மாணவ - மாணவியருக்கு, கலெக்டர் பரிசளிப்பார்.