உள்ளூர் செய்திகள்

4.5 லட்சம் மாணவர்களுக்கு ஆர்.டி.இ., கட்டணம் இழுத்தடிப்பு; தத்தளிக்குது தனியார் பள்ளிகள்

மதுரை: தமிழகத்தில் ஆர்.டி.இ.,யின் (கட்டாய கல்வி உரிமை சட்டம்) கீழ் சேர்க்கையான 4.5 லட்சம் மாணவர்களுக்கு 2023 - 2024 க்கான கட்டணத் தொகையை பள்ளிகளுக்கு வழங்குவதை இழுத்தடிப்பதால் தனியார் பள்ளிகள் தத்தளிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.மத்திய அரசின் இச்சட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் துவக்க வகுப்புகளில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு சேர்க்கை வழங்க வேண்டும். இச்சேர்க்கைக்கான கட்டணத் தொகையை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும்.ஆனால் 2023 - 2024 கல்வியாண்டில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் சேர்ந்த 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான இக்கட்டணத்தை அப்பள்ளிகளுக்கு இதுவரை வழங்கவில்லை. இத்தனைக்கும் நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டு இரண்டரை மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. இதுகுறித்து தமிழக அரசிடம் பள்ளிகள் வலியுறுத்தியபோது மத்திய அரசிடமிருந்து நிதி வராததால் இத்தொகையை வழங்க இயலவில்லை என தெரிவித்துள்ளது. இதனால் பள்ளி நிர்வாகங்கள் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் தவிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.இதுகுறித்து தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு (பெப்சா) மாநில தலைவர் ஆறுமுகம் கூறியதாவது:இந்நிதியை பள்ளிகளுக்கு விடுவிக்க உத்தரவு பிறப்பித்தும் இழுத்தடிக்கப்படுகிறது. இது மானியமோ, இலவசமோ அல்ல. மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பது ஏற்புடையதல்ல. தமிழக அரசு அறிவுறுத்தியதால்தான் இம்மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் பணியாற்றும் 33 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கியது போல் ஆர்.டி.இ., கட்டணத்தையும் பள்ளிகளுக்கு விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் ஆர்.டி.இ., கட்டணத்தை மாணவர்களிடம் பெற்றுக்கொள்ள அனுமதியளிக்க வேண்டும். அரசு வழங்கிய பின் அத்தொகையை பெற்றோர் வங்கிக் கணக்கிற்கு பள்ளிகள் நேரடியாக பணத்தைத் திருப்பிச் செலுத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.அதேநேரம் 2024 -2025 க்கான கட்டணத்தையும் உரிய நேரத்தில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2012 -2013 முதல் தற்போது வரை இப்பிரிவில் படித்த 20 சதவீதம் பேருக்கான கட்டணத்தை இதுவரை பெற முடியவில்லை. அதையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்