6 மினி ஜவுளி பூங்காக்கள்: தமிழக அரசு ஒப்புதல்
சென்னை: தமிழகத்தில் ஆறு சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களுக்கு, திட்ட ஒப்புதல் அரசாணைகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் திட்டத்தின் கீழ், திருவள்ளூர் திருப்பதி மினி டெக்ஸ்டைல் பார்க்; தர்மபுரி பாரத் மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க்; கரூர் வி.எம்.டி.,மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க்; திருப்பூர் கார்த்திகேயா வீவிங் பார்க்; கரூர் ஸ்ரீ பிரனவ் மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க்; கரூர் நாச்சி மனி டெக்ஸ்டைல் பார்க் ஆகியவை துவக்கப்பட உள்ளன.இவற்றின் திட்ட செயலாக்கத்திற்கான மொத்த மானியத் தொகை, 13.75 கோடி ரூபாய். முதற்கட்டமாக, 5 கோடி ரூபாய் ஒப்பளிப்பு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான திட்ட ஒப்புதல் அரசாணைகளை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின், மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க் நிர்வாகிகளிடம் வழங்கினார்.இதன் வழியே, 1,200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஒரு பூங்காவில் ஆண்டுக்கு, 24 லட்சம் மீட்டர், துணி வகைகள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தில் அதிகபட்சமாக, 2.50 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.மேலும், ஜவுளித் தொழில் முனைவோர்களுக்கான, முதலீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக, 17 ஜவுளி நிறுவனங்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் மூலதன முதலீடு மானியத் தொகை, 9.25 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. ஐந்து நிறுவனங்களுக்கு, 5.33 கோடி ரூபாய் மானியத் தொகைக்கான காசோலையை, முதல்வர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் காந்தி, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, கைத்தறித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துணி நுால் துறை ஆணையர் வள்ளலார் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.