6,384 தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் 3 ஆண்டுகளில் துவக்கம்
சென்னை: தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், 6,384 புத்தொழில் நிறுவனங்கள் புதிதாக துவக்கப்பட்டுள்ளன.அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை, கடந்த செப்., 20ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் வெளியிடப்பட்டது. கடந்த 2021 வரை, தமிழகத்தில், 2,032 புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.இன்று நான்கு மடங்கிற்கு மேல் அதிகரித்து, 8,416 ஆக உயர்ந்துள்ளன. அதாவது, மூன்று ஆண்டுகளில், 6,384 புத்தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டு உள்ளன. மகளிர், ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை, 2020ல், 966 ஆக இருந்தது. தற்போது, 3,163 ஆக உயர்ந்துள்ளது.இது அரசின் செயல்பாட்டிற்கு கிடைத்த வெற்றி. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழலை கட்டமைத்து செயல்படும் மாநிலங்கள் பட்டியலை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழகம் முதல் நிலையை பிடித்துள்ளது.ஆதார நிதிதுவக்க நிலையில் உள்ள, புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், தமிழக அரசு தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு, ஆதார நிதியாக 10 லட்சம் ரூபாயை வழங்குகிறது. இதுவரை, 132 நிறுவனங்களுக்கு 13.95 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.பட்டியலினம் மற்றும் பழங்குடியினரால் நிறுவப்படும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் திட்டத்தில், இதுவரை 38 நிறுவனங்களுக்கு 55.20 கோடி ரூபாய் பங்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.அரசின் நேரடி முதலீடு பெற்ற, புத்தொழில் நிறுவனங்கள் வழியாக, 1,913 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.வழிகாட்டி மென்பொருள்புத்தொழில் நிறுவனங்களுக்கு தகுந்த வழிகாட்டுதலை அளிக்க, வழிகாட்டி தளம் எனப்படும், Mentor TN துவக்கப்பட்டுள்ளது. இதில், 257 துறைசார் வல்லுனர்கள் வழிகாட்டுனர்களாக இணைந்துஉள்ளனர். இதுவரை, 669 புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பயன் பெறும் வகையில், ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வழியாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து, பொருள் மற்றும் சேவைகளை, சலுகை அடிப்படையில் பெற முடியும். இதுவரை, 137 நிறுவனங்கள் ஸ்மார்ட் கார்டு பெற்று பயனடைந்துள்ளன.பன்னாட்டு அளவில் தடம் பதிக்கும் நோக்கில், துபாயில் புதிதாக புத்தொழில் ஒருங்கிணைப்பு மையம் துவக்கப்பட்டுள்ளது. இதன் வழியே, தமிழகத்தில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துபாய் சென்று, அங்குள்ள வாய்ப்புகளைப் பெற வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், உலக புத்தொழில் மாநாடு நடத்தப்பட உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.