உள்ளூர் செய்திகள்

ரூ.69.20 கோடிக்கு 81 லட்சம் புத்தகங்கள் விற்பனை: அமைச்சர்

சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழகம் முழுதும் நடந்த புத்தக கண்காட்சிகளில், 69.20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன என அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.பள்ளிக்கல்வி துறையின் பொது நுாலக இயக்ககம் சார்பில், நுாலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது, நுாலகங்கள் மற்றும் வாசகர் வட்டங்களுக்கு கேடயம் வழங்கும் விழா, சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா அறிமுகம் போன்றவை, சென்னையில் நேற்று நடந்தன.சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா, அடுத்த ஆண்டு ஜனவரி, 16 முதல் 18 வரை, சென்னை வர்த்தக மையத்தில் நடக்கும். இதில், இத்தாலியை சேர்ந்த, பொலோனியா பன்னாட்டு குழந்தைகள் புத்தக கண்காட்சி நிறுவனம் பங்கேற்க உள்ளதாக, அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது:கடந்த ஆண்டு சென்னையில் நடந்த முதலாவது, சென்னை பன்னாட்டு புத்தக திருவிழாவில், 24 நாடுகள் பங்கேற்றன. இதில், 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. நடப்பாண்டு பன்னாட்டு புத்தக திருவிழாவில், 40 நாடுகள் பங்கேற்றன; 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.அடுத்த ஆண்டு புத்தக திருவிழாவில், 50 நாடுகள் பங்கேற்க, 1,000 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் உள்ள நுால்கள், வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.தமிழ்நாடு பாடநுால் கழகம் சார்பில், உலக மொழிகளில் இருந்து, 160 புத்தகங்கள், தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன. இதற்காக, முதல்வர் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளார்.போட்டித்தேர்வு மாணவர்கள் பயன் பெறும் வகையில், 32 மாவட்ட மைய நுாலகங்கள், 314 முழு நேர கிளை நுாலகங்கள், 1,612 பகுதி நேர கிளை நுாலகங்கள் என, மொத்தம் 1,958 நுாலகங்களில், 'வைபை' வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில், புத்தக கண்காட்சிகளை, 86.4 லட்சம் மக்கள் பார்வையிட்டு உள்ளனர்.கண்காட்சியில், 69.20 கோடி ரூபாய்க்கு, 81.45 லட்சம் நுால்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இளைஞர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க, இளைஞர் இலக்கிய திருவிழா நடத்த, 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.புதிதாக உருவாக்கப்பட்ட, தென்காசி, திருப்பத்துார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா, 6 கோடி ரூபாயில், மாவட்ட மைய நுாலகங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறையில், மாவட்ட மைய நுாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.பொது நுாலகத்துறை இயக்குனர் சங்கர் வரவேற்றார். பள்ளிக்கல்வி துறை செயலர் மதுமதி, பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் தலைவர் லியோனி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்