7 பேருக்கு ஓவிய ஆசிரியர் பதவி உயர்வு: உயர் நீதிமன்றம் உத்தரவு
நாமக்கல் பொன்விழா நகரை சேர்ந்தவர் மதுரம் (46). பள்ளி கல்வித்துறையில் ஆசிரியரல்லாத பணியாளராக பணியாற்றி வருகிறார். அவர் மற்றும் ஆறு பேரும் 1994ல் ஓவியம் மேல்நிலைத்தேர்வில் வெற்றி பெற்றனர்.கடந்த 2002ல் துறை அனுமதி பெற்று ஓவிய ஆசிரியருக்கான டி.டி.சி., பயிற்சியை முடித்தனர். 2003ல் தேர்வு முடிவுகள் வெளிவந்ததும், ஓவிய ஆசிரியராக பதவி உயர்வு கேட்டு, உரிய வழியாக மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், பள்ளிக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு விண்ணப்பித்தனர். ஆசிரியரல்லாத பதவியில் இருப்பவர்களை அலுவலகம் சார்ந்த அனுபவத்தின் அடிப்படையில் ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கு நியமிப்பது உகந்ததல்ல என, 2000 டிசம்பர் 18ம் தேதி அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்து, பதவி உயர்வு மறுக்கப்பட்டது. இது தொடர்பாக 2004 ஆகஸ்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓவிய ஆசிரியராக பணி மாறுதல் வழங்க வேண்டி 7 பேரும் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதிகள் வழங்கிய இடைக்கால தீர்ப்பில், வழக்கு முடியும் வரை அவர்களுக்காக நாமக்கல் கல்வி மாவட்டத்தில் தலா ஒரு ஓவிய ஆசிரியர் பணியிடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பித்தனர்.மாவட்டத்தில் 7 ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் காலியாக வைக்கப்பட்டன. எட்டு மாதம் கழித்து 2008 டிசம்பர் 1ம் தேதி நாமக்கல் முதன்மை கல்வி அலுவலர், மதுரம் உள்ளிட்ட 7 பேருக்கு அனுப்பிய கடித்ததில், ஆசிரியரல்லாத பணியாளர்கள் கலை ஆசிரியர் பணியிடத்துக்குரிய கல்வித்தகுதி பெற்றிருந்தாலும், கலை ஆசிரியர் பணியிடம் வழங்க விதிகளில் இடமில்லை என, தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் ஏழு பேரும் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணைக்கு ந்த பாது நீதிபதி வெங்கட்ராமன், இரண்டு வாரகாலத்துக்குள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துமாறு உத்தரவிட்டார்.நீதிமன்ற உத்தரவின்படியும், பள்ளிக்கல்வி இயக்குனரின் வழிகாட்டுதலின் பேரிலும், மதுரம், மோகன், தெய்வராஜ், மாதேஸ்வரன், சேகர், தாமோதரன், மணிவண்ணன் ஆகிய 7 பேருக்கும் பணி மாறுதல் மூலம் ஓவிய ஆசிரியராக பணி நியமனம் செய்து முதன்மை கல்வி அலுவலர் மல்லிகா ஆணை பிறப்பித்தார். அவர்களை தொடர்ந்து சேலம், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 14 பேர் ஓவிய ஆசிரியராக பணி மாறுதல் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.