784 கி., கஞ்சா, போதை சாக்லேட்; 11 மாதங்களில் பறிமுதல்
பெ.நா.பாளையம்: கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜன., 1 முதல் இதுவரை, 784 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் போதை சாக்லேட்டுகளை மாவட்ட போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.தமிழக அரசு, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்துள்ளது. இது தவிர, கஞ்சா மற்றும் போதை சாக்லேட் பறிமுதலில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, தொண்டாமுத்துார், சூலுார், பெரியநாயக்கன்பாளையம், ஆனைமலை, அன்னூர் ஆகிய பகுதிகளில், 60 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, சீல் வைக்கப்பட்டன. நவ., மாதத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, 206 கடைகளுக்கு, 10 லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.இந்த ஆண்டு ஜன., 1 முதல் தற்போது வரை மாவட்ட காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட, 591 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களிடமிருந்து, 784 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் போதை சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.