8 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது மெட்டா நிறுவனம்
வாஷிங்டன்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா, 8 ஆயிரம் ஊழியர்களை இமெயில் அனுப்பி பணி நீக்கம் செய்துள்ளது.செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ., காரணமாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அதில் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த துறையில் அதிகளவு பணம் முதலீடு செய்கின்றன. இதனால் செலவை குறைப்பதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் அந்நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மெட்டா நிறுவனம் இந்த ஆண்டு ஏ.ஐ., துறையில் 125 -145 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 12,500 கோடி ரூபாய் முதல்,14,500 கோடி ரூபாய் வரை) முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.இந்நிலையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா இன்று 8 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. முதலில் அவர்களை வீட்டில் இருந்தவாறு பணி செய்யுமாறு அந்த நிறுவனம் உத்தரவிட்டது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த ஊழியர்கள் யாரும் அலுவலகம் வர வேண்டாம் எனக்கூறிய அந்த நிறுவனம் பிறகு அவர்கள் பணி நீக்கம் செய்ததை இமெயில் மூலம் அறிவித்தது. முதலில் சிங்கப்பூரில் பணியாற்றிய ஊழியர்களுக்கு இமெயிலில் அதிகாலை 4 மணிக்கு பணி நீக்கம் செய்வதற்கான உத்தரவை அனுப்பியது.மேலும், 7 ஆயிரம் ஊழியர்களை ஏ.ஐ., சார்ந்த துறைகளுக்கு மாற்றியதுடன், 6 ஆயிரம் காலி பணியிடங்களை நிரந்தரமாக நீக்கி உள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கைகளில் பொறியியல் மற்றும் விற்பனை பிரிவை சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த சில நாட்களாகவே மெட்டா நிறுவனத்தில் பணி நீக்க நடவடிக்கைகள் குறித்து ஊழியர்கள் அச்சத்தில் இருந்தனர். இதனால், அலுவலகத்தில் வழங்கப்படும் இலவச சிற்றுண்டிகள் மற்றும் லேப்டாப் சார்ஜர்களை அள்ளிச் சென்றனர்.மேலும், ஊழியர்களின் லேப்டாப்களில், புதிய மென்பொருள் ஒன்றை மெட்டா நிறுவனம் நிறுவி உள்ளது. அதில் கீபோர்டில் அவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்களின் மவுஸ் செயல்படும் விதம் என்பதை அறிந்து கொண்டு, எதிர்காலத்தில் அந்த வேலையை ஏ.ஐ., செய்ய பயன்படுத்த மெட்டா திட்டமிட்டது. இதற்கு எதிராக ஊழியர்கள் போராடி வருகின்றனர்.