+8, +85, +65 எண்களில் இருந்து அழைப்பா? பொதுமக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
புதுடில்லி: புதுடில்லி அறிமுகமில்லாத சர்வதேச அழைப்புகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி, தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதுபோன்ற அழைப்புகள் வந்தால், தொலைபேசி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தொலைத்தொடர்பு துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:சர்வதேச மோசடி அழைப்புகள் தடுப்பு தொழில்நுட்பம், கடந்த அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்டது.அடுத்த 24 மணி நேரத்தில், பெறப்பட்ட சர்வதேச அழைப்புகளில், 1.35 கோடி அழைப்புகள் அதாவது 90 சதவீதம், இந்திய தொலைபேசி எண்களில் ஊடுருவல் செய்து, மேற்கொள்ளப்பட்டது தெரியவந்து, தடை செய்யப்பட்டன.அதன்பின், தங்கள் தந்திரத்தை மாற்றிய மோசடிக்காரர்கள், சர்வதேச எண்களிலேயே அழைக்கத் துவங்கி விட்டனர். எனவே, இந்திய தொலைபேசிக் குறியீடான +91 என்பதில் துவங்காத, முன்பின் தெரியாத சர்வதேச குறியீடுடன் துவங்கும் எண்ணில் இருந்து அழைப்புகள் வந்தால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.அதுபோன்ற அழைப்பை பெறுபவர்கள், சஞ்சார் சாத்தி இணையதளம் அல்லது தொலைபேசி நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் செய்யலாம்.தற்போது மோசடிக்காரர்களின் அழைப்புகள், +8, +85, +65 என துவங்கும் எண்களில் இருந்து வருவது தெரிய வந்துள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, பிரத்யேக குழு ஒன்றை அரசு அமைத்துஉள்ளது.சர்வதேச அழைப்பு வரும்போது, அதை சர்வதேச அழைப்பு என தொலைபேசி நிறுவனங்கள் குறிப்பிட்டு, வாடிக்கையாளருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.