உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 2011 வரலாறு ரிப்பீட் : சித்தராமையாவுக்கும் எடியூரப்பா கதி?

2011 வரலாறு ரிப்பீட் : சித்தராமையாவுக்கும் எடியூரப்பா கதி?

நில மறு அறிவிப்பு; சுரங்க தொழிலில் பெருமளவு முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில், முதல்வராக இருந்த எடியூரப்பா ராஜினாமா செய்து, சிறையில் அடைக்கப்பட்டது போன்று, முதல்வர் சித்தராமையாவுக்கும் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.தென் மாநிலங்களில் கர்நாடகாவில் ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைத்து 2006ல் பா.ஜ., ஆட்சியை பிடித்தது. முதல்வராக குமாரசாமியும், துணை முதல்வாரக எடியூரப்பாவும் இருந்தனர்.

விசாரணைக்கு அனுமதி

பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், எடியூரப்பா தலைமையில் முதன்முறையாக 2008ல் பா.ஜ., ஆட்சியை பிடித்தது. பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில், எடியூரப்பா துணை முதல்வராக இருந்த போது, பெல்லந்துார், தேவரபீசனஹள்ளியில் 15 ஏக்கர், 30 சென்ட் நிலத்தை முறைகேடாக நில மறு அறிவிப்பு செய்தார் என்றும்; பல்லாரியில் சட்ட விரோதமாக சுரங்க தொழில் மூலம் கனிமங்கள் எடுக்கப்பட்டது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.இது தொடர்பாக வழக்கறிஞர் சிராஜிதின் பாஷா, அப்போதைய லோக் ஆயுக்தா நீதிபதியாக இருந்த சந்தோஷ் ஹெக்டேவிடம் சமர்ப்பித்த புகாரின் அடிப்படையில், அப்போதைய கவர்னர் பரத்வாஜ், வழக்கு தொடர அனுமதி அளித்தார்.இவ்விரு வழக்குகள் தொடர்பாக, லோக்ஆயுக்தாவின் அறிக்கையை கவனமாக ஆய்வு செய்த, அப்போதைய கவர்னர் பரத்வாஜ், கர்நாடக லோக் ஆயுக்தா விதிகளை காரணம் காட்டி, முதல்வராக இருந்த எடியூரப்பாவுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

ராஜினாமா

'எடியூரப்பாவை விசாரிக்க லோக்ஆயுக்தா போலீசாருக்கு சிறப்பு அனுமதி தேவையில்லை. ஏற்கனவே வழக்கு தொடர்பான அறிக்கையின் நகலை என்னிடம் சமர்ப்பித்தனர். அதை ஏற்றுக் கொள்கிறேன்' எனவும் கூறினார்.இதையடுத்து எடியூரப்பா, 2011 ஜூலை 31ல் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின், சிறையில் அடைக்கப்பட்டு, வெளியே வந்தார். அப்போது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியும்; மாநிலத்தில் பா.ஜ., ஆட்சியும் இருந்தது.பா.ஜ., - காங்கிரஸ் இடையே வார்த்தை போர் வெடித்தது. கவர்னர், மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறார் என பா.ஜ.,வினர் குற்றம்சாட்டினர். முதல்வர் மீது வழக்கு தொடர அனுமதி அளித்த விஷயம், நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் கர்நாடக மாநிலம், ஒரு முன்மாதிரியாகவும், முற்போக்கான மாநிலமாகவும் இருந்தது.காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், 'மாநிலத்தின் கவர்ச்சியை பா.ஜ., அரசு கெடுத்துவிட்டது. தனக்கு தானே எடியூரப்பா 'குழி' பறித்து கொண்டார். கவர்னர் ஒரு அரசியல் அமைப்பு அதிகாரி. அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, இதுபோன்ற விஷயங்களில் முடிவெடுக்கும் உரிமை, அவருக்கு உண்டு' என்றனர்.

14 மனைகள்

இதேபோன்று, 'மூடா' எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்தில், முதல்வர் சித்தராமையா, தனது மனைவியின் பெயரில் 14 மனைகளை, முறைகேடாக பெற்றுள்ளார்.அவர் மீது விசாரணை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்' என சமூக ஆர்வலர் ஆபிரஹாம், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் கேட்டு கொண்டார்.இம்மாதம் 17ம் தேதி முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த கவர்னர் உத்தரவிட்டார். கவர்னரின் முடிவுக்கு எதிராக, நேற்று முன்தினம் மாநிலம் முழுதும் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் எடியூரப்பாவுக்கு எதிராக விசாரணை நடத்த அனுமதி அளித்து; அதன் மூலம் அவர் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது சித்தராமையா மீதும் விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.கவர்னரின் இந்த முடிவு, முதல்வருக்கு பாதிப்பை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கு எதிர்காலத்தில் என்ன மாதிரியான திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா சந்தித்த அதே கதி, சித்தராமையாவுக்கும் வருமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
செப் 03, 2024 07:04

சித்தராமையாவிற்கு எடியூரப்பாவைவிட மிக மோசமான நிலை ஏற்பட வேண்டும் ,பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக எல்லா இழிதரமான செயல்களையும் செய்து வரும் அவன் அந்த பதவிக்கு தகுதியானவனா


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை