உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தேர்தல் நெருங்குவதால் ஜூரம்; ஓட்டுகள் சரிந்தது எப்படி?

தேர்தல் நெருங்குவதால் ஜூரம்; ஓட்டுகள் சரிந்தது எப்படி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உள்ளாட்சி மற்றும் சட்டசபை தேர்தல்கள் நெருங்குவதால், சிதம்பரம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., விற்கு ஓட்டுகள் சரிவிற்கான காரணம் குறித்து, அக்கட்சி நிர்வாகிகள் கிராமம் கிராமமாக அலசி ஆராய்ந்து வருகின்றனர்.லோக்சபா தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் வி.சி.,கட்சி வேட்பாளர் திருமாவளவன் 1 லட்சத்து 3 ஆயிரத்து 554 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், அரியலுார் மாவட்டத்தில் அரியலுார், ஜெயங்கொண்டம், பெரம்பலுார் மாவட்டத்தில் குன்னம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.இந்த 6 சட்டசபை தொகுதிகளில், சிதம்பரம் சட்டசபை தொகுதியில் மட்டுமே, அ.தி.மு.க., வேட்பாளரைவிட, 32 ஆயிரத்து 481 ஓட்டுகள், வி.சி., வேட்பாளருக்கு கிடைத்தது.சிதம்பரம் சட்டசபை தொகுதியை பொறுத்தவரை, பரங்கிப்பேட்டை, கிள்ளை கடற்கரையோர மீனவ கிராமங்களின் ஓட்டுகள் தொடர்ந்து அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு சாதகமாகவே இருந்து வந்தது. இதனால், சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., வின் கோட்டை என, அக்கட்சியினர் மார்தட்டி வந்தனர்.இந்நிலையில், இத்தொகுதியில், அக்கட்சிக்கு ஓட்டுகள் கிடைக்காததால் அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் முதல் அடிமட்ட நிர்வாகிகள் வரை அதிர்ச்சிக்குள்ளாகினர்.லோக்சபா தேர்தலில், ஒரு சில மீனவ கிராமங்களில் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டுகள் பிரிந்த நிலையில், அனைத்து மீனவ கிராமங்களிலும், பா.ஜ.,. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் கனிசமான ஓட்டுகளை பெற்றுள்ளனர். முஸ்லிம்கள் ஓட்டுகளும் வி.சி., வேட்பாளர் பெற்றுள்ளார். இதனால், அ.தி.மு.க., விற்கு விழ வேண்டிய வழக்கமான ஓட்டுகள் சிதறியதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.மேலும், கூட்டணி பலம் இல்லாமல்போனது மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாதது போன்ற காரணங்களும் சிதம்பரம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., வுக்கு பின்னடைவு ஏற்பட்டதாக மூத்த நிர்வாகிகள் புலம்புகின்றனர்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த வரை கட்சி ராணுவ கட்டுப்பாட்டுடன் இருந்தது. கட்சியின் முன்னணி நிர்வாகிகள் முதல், கிளை செயலாளர் வரை யார் தப்பு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதனால், அனைவரும் கட்சிக்கு விசுவாசியாகவும், தப்பு செய்யவும் அஞ்சினர். அந்த பயம் தற்போது போயே போச்சு எனவும் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், விரைவில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் அடுத்து சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கு ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., நிர்வாகிகள், தொகுதியில் ஓட்டு சதவீதம் குறைந்தற்கான காரணத்தை அறிந்து, சரி செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அதன்படி, கிராமம் கிராமமாக, லோக்சபா தேர்தல் ஓட்டு சரிவு காரணத்தை அலசி ஆராய்ந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ARAAJN
ஜூன் 26, 2024 07:14

ஆமாங்க நானும் அதிமுகவின் விசுவாசி தான் ஜெயலலிதா இருந்தவரை. நீங்கள் பிஜேபியுடன் உறவை முறித்துக் கொண்டதால் உங்களுக்கு வோட்டு போடவில்லை. என் நண்பர்களும் அப்படியே. இதுதான் காரணம்.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ