உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மெட்ரோ பணியால் ஒக்கியம் மடுவு அடைப்பு; பள்ளிக்கரணை சதுப்புநில பறவைகள் தவிப்பு

மெட்ரோ பணியால் ஒக்கியம் மடுவு அடைப்பு; பள்ளிக்கரணை சதுப்புநில பறவைகள் தவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பழைய மாமல்லபுரம் சாலையில் ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தற்காலிகமாக அடைக்கப்பட்டதால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தரையில் கூடுகட்டி முட்டையிடும் பறவைகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். சென்னை, வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அமைந்துள்ளது. இங்கு, 198 வகை பறவைகளின் வருகை, கணக்கெடுப்பு வாயிலாக, ஆவண ரீதியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்சென்னையில் உள்ள பல்வேறு ஏரி, குளங்களில் இருந்து வெளியேறும் நீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சேரும். இங்கிருந்து ஒரு பகுதி உபரிநீர், ஒக்கியம் மடுவு வழியாக பகிங்ஹாம் கால்வாய் வாயிலாக, முட்டுக்காடு வரை சென்று கடலில் சேரும்.மழைக்காலத்தில் வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வெள்ளநீர், இவ்வாறு தான் வெளியேற்றப்பட்டு வருகிறது.இதில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கும் பகிங்ஹாம் கால்வாய்க்கும் இடையே ஒக்கியம் மடுவு, இயற்கையான நீர்வழித்தடமாக அமைந்துள்ளது. இந்நிலையில், பழைய மாமல்லபுரம் சாலையில், மெட்ரோ ரயில் திட்டத்துக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, துரைப்பாக்கம், காரப்பாக்கம் இடையே ஒக்கியம் மடுவு பாலத்தை ஒட்டி துாண்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.இந்த பணிக்காக, நீர் வழிப்பாதை தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் அடியில், நான்கு வழிகளில் வெளியேற வேண்டிய நீர் தற்போது, ஒருவழியில் மட்டுமே செல்ல வழி செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய மழையால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சேர்ந்துள்ள நீர், கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சதுப்பு நிலத்தை நம்பியுள்ள பறவைகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், தரையில் கூடு கட்டி முட்டையிடும் வகை பறவைகளின் வருகை, அதிகரித்து உள்ளது.இதில், நீல தாழைக்கோழி, பவளக்கால் உள்ளான், உள்ளிட்ட, 16 வகை பறவைகள், சதுப்பு நிலத்தை நம்பி உள்ளன. சேறுடன் இருக்கும் பகுதியில், சிறிய புதர்களில் தான் கூடு கட்டி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். தற்போது, மெட்ரோ ரயில் பணிக்காக ஒக்கியம் மடுவு வழியாக தண்ணீர் வெளியேறுவது தடைபட்டுள்ளது. இதனால், 16 வகை பறவைகள் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் வைத்து, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒக்கியம் மடுவு பகுதியில் துாண்கள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க, ஒப்பந்த நிறுவனத்திடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஓரிரு மாதங்களில், இங்கு ஏற்படுத்தப்பட்ட அடைப்புகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஆக 08, 2024 19:58

சென்னையில் இருக்கும் ஒரு சில சதுப்புநிலங்களில் பள்ளிக்கரணை சதுப்பு நிலமும் ஒன்று. சமீபத்தில் அங்கு சென்று பார்வையிட்டேன். பலவிதமான பறவைகள். மக்கள் நடைப்பயிற்சி செய்வதையும், போட்டோ கிராபர்கள் பல கோணங்களில் அந்த பறவைகளை படம் எடுப்பதையும் பார்த்து மகிழ்ந்தேன். அந்த மகிழ்ச்சி போய்விடும் போல தெரிகிறது. அந்த சதுப்பு நிலத்துக்கும் வந்தது ஆபத்து.. இயற்கை ஆர்வலர்கள் ஒன்றுக்கூடி நியாயமான போராட்டம் செய்து அந்த அறிய சதுப்புநிலத்தை மீட்டெடுக்கவேண்டும்.


Ramesh Sargam
ஆக 08, 2024 13:05

சென்னையில் இருக்கும் ஒரு சில சதுப்புநிலங்களில் பள்ளிக்கரணை சதுப்பு நிலமும் ஒன்று. சமீபத்தில் அங்கு சென்று பார்வையிட்டேன். பலவிதமான பறவைகள். மக்கள் நடைப்பயிற்சி செய்வதையும், போட்டோ கிராபர்கள் பல கோணங்களில் அந்த பறவைகளை படம் எடுப்பதையும் பார்த்து மகிழ்ந்தேன். அந்த மகிழ்ச்சி போய்விடும் போல தெரிகிறது. அந்த சதுப்பு நிலத்துக்கும் வந்தது ஆபத்து.. இயற்கை ஆர்வலர்கள் ஒன்றுக்கூடி நியாயமான போராட்டம் செய்து அந்த அறிய சதுப்புநிலத்தை மீட்டெடுக்கவேண்டும்.


Mani . V
ஆக 08, 2024 04:34

நாங்கள் மக்களுக்கு மட்டும் எதிரானவர்கள் அல்ல. விலங்கு, பறவை இனங்களுக்கும் நாங்கள் எதிரானவர்கள்தான்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ