புதுடில்லி: பிரிட்டனிலிருந்து வெளியாகும், 'கார்டியன்' என்ற நாளிதழ், இந்தியா குறித்து ஒரு செய்தி வெளியிட்டு, இந்தியா - -பாகிஸ்தான் இடையே பிரச்னையை ஏற்படுத்தியது. கடந்த 2020லிருந்து இதுவரை பாகிஸ்தானிலுள்ள 20 பேரை, இந்தியாவின் ரகசிய அமைப்பான, 'ரா' கொலை செய்துள்ளது என்பது தான் அந்த ரிப்போர்ட்.'முற்றிலும் தவறான செய்தி... இந்தியாவை களங்கப்படுத்தும் சதி' என, இந்திய வெளியுறவுத்துறை மறுப்பு தெரிவித்தது; ஆனாலும், பிரச்னை இதனுடன் முடியவில்லை.ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு, 'டிவி' பேட்டியில், 'இந்தியாவில் தாக்குதல் நடத்தி விட்டு பக்கத்து நாடுகளுக்கு சென்றால், அங்கேயே சென்று அவர்களை ஒழித்து கட்டுவோம்' என, கூறினார். இது மறைமுகமாக 'கார்டியன்' ரிப்போர்ட்டை உறுதி செய்கிறது. 'அப்படியானால் அந்த, 20 பேரையும் கொன்றது இந்திய உளவுத்துறை தானா' என, டில்லி அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரங்களில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.இது குறித்து கூறப்படுவது இதுதான்... '2019ல் காஷ்மீரின் புல்வாமாவில், பாகிஸ்தான் தீவிரவாதிகளால், 40 துணை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அதன் பின், பாகிஸ்தானுக்குள் சென்று இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில், தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின், இந்தியாவின் கொள்கை மாறி விட்டது.'இஸ்ரேலின் மொசாத் ரகசிய இயக்கம் போல, எதிரி நாட்டு தீவிரவாதிகளை, அவர்களுடைய நாட்டிலேயே கொல்ல வேண்டும் என, மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாம். ஆனால், இந்த ரகசிய முடிவு இப்போது ராஜ்நாத் பேட்டி வாயிலாக வெளிவந்துவிட்டதே' என, வருத்தப்படுகின்றனர் சில மூத்த அதிகாரிகள்.'வேண்டுமென்றே தான் ராஜ்நாத் சிங் இதை சொல்லிஇருக்கிறார். காரணம், லோக்சபா தேர்தல்' என்கின்றனர் அரசியல்வாதிகள்.