'ஜெயிச்ச பின்னாடி எட்டிக்கூடப் பார்க்கல...''வழக்கமாக, மக்கள் பிரதிநிதிகள் மீது வாக்காளர்கள் முன்வைக்கும் பிரதானக் குற்றச்சாட்டு இதுவாகத் தான் இருக்கும்.ஆனால், இந்த முறை, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நீலகிரி உட்பட கொங்கு மண்டலத் தொகுதிகளில், 'பிரசாரத்துக்குக் கூட, வேட்பாளரே எட்டிப் பார்க்கல' என்று, வாக்காளர்கள் வெளிப்படையாக குமுறுகின்றனர். பிரசாரம்னா சும்மாவா!
பிரதானக்கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்ததும், உடனடியாக பிரசாரக்களத்துக்கு வேட்பாளர் வர முடிவதில்லை. கட்சி மற்றும் கூட்டணியினரிடம் 'தாஜா', பணம் திரட்டுதல், வியூகங்களை வகுத்தல், பிரசாரப் பயணத்திட்டத்தை உருவாக்குதல் என, பல முன்னெடுப்புகளுக்குப் பின்தான், வாக்காளரைச் சந்திக்கச் செல்ல முடிகிறது.முதலில் கட்சிக்குள் அதிருப்தியாளர்களைச் சரிக்கட்ட வேண்டியுள்ளது. குறிப்பாக, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நீலகிரி அ.தி.மு.க., வேட்பாளர்களை எடுத்துக்கொண்டால், அனைவரும் புதுமுகங்கள்.தொகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகளில் துவங்கி, சட்டசபைத் தொகுதி வாரியாக முக்கியப் பிரமுகர்களைப் பரிச்சயமாக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம், இவர்களுக்கு இருந்தது.உரிய மதிப்புக் கொடுக்காவிட்டால், வேட்பாளர்களை, ஓட்டு சேகரிப்பின்போது புறக்கணிப்பதும், வாக்காளரை எதிர்ப்புக்காட்ட துாண்டுவதும், கட்சிப் பிரமுகர்களின் 'கைங்கர்யமாக' மாறிவிடுகிறது.பல தடைகளைக் கடந்து பிரதானக்கட்சிகளின் வேட்பாளர்கள் பிரசாரத்தை முடித்துவிட்டார்களா என்றால், கேள்விக்குறியே. பரந்து விரிந்த எல்லை
லோக்சபா தொகுதியில் முக்கியப் பிரச்னை, தலைநகரில் இருந்து நாற்புறமும் 40 முதல் 100 கி.மீ., வரை பரந்து விரிந்துள்ள எல்லைகள்தான். நீலகிரி, கோவை மாவட்டம், வால்பாறை, திருப்பூர் லோக்சபா தொகுதியில், அந்தியூர், பர்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மலை கிராமங்கள் நிறைந்தவை.மூலை முடுக்கெங்கும் பிரசாரத்திற்கு வேட்பாளர்கள் குறிப்பிட்ட காலவரையறைக்குள் செல்வதென்பது சிரமமான செயல். குறிப்பாக, பிரதானக்கட்சிகளுக்குக் கூட பொருத்தமான ஓட்டுச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் அமைவதும், அவர்கள் வாயிலாக வாக்காளர்களைக் கவர்ந்து ஓட்டுக்களைத் தங்கள் வசமாக்குவதும், வேட்பாளர்களுக்குக் கடினமான வேலை. திருப்தி சாத்தியம் இல்லை
பிரசாரம் இன்று முடிவடைய உள்ளது. பிரதானக்கட்சிகளின் வேட்பாளர்கள் பெரும்பாலானோர், 50 சதவீத அளவுக்குத்தான் தொகுதிக்குள் எட்டிப்பார்க்க முடிந்திருக்கிறது; பெரும்பாலும் அந்தந்தப்பகுதிகளில் சாலையோரத்துடன் பிரசாரங்கள் முடிந்திருக்கின்றன. டிஜிட்டல், சமூக வலைதளப்பிரசாரங்கள் ஓரளவு கைகொடுத்திருக்கிறது. ஓட்டுச்சாவடிப் பகுதிகளுக்கென ஏற்படுத்தப்பட்ட கட்சி மற்றும் கூட்டணி ரீதியிலான குழுவினர் மட்டும்தான், வீடு, வீடாகச் சென்று வாக்குகளைக் கேட்பது சாத்தியமாக இருக்கிறது.முழுத் திருப்தியுடன் பிரசாரத்தை நிறைவுசெய்த வேட்பாளர் எவரும் இல்லை. தங்கள் பகுதியில் பிரசாரத்தை நிறைவுசெய்த தலைவர்களின் பிரசாரம்தான், ஓரளவு திருப்தியை வேட்பாளர்களுக்குத் தந்திருக்கும்.வாக்காளர்களை 'எட்டிக்கூட' பார்க்க இயலாத வேட்பாளர்கள், அவர்களது மனதை எப்படித்தொட்டிருக்க முடியும் என்பது கேள்விக்குறியே!