தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னை யில் நடந்த உண்ணாவிர தப் போராட்டத்தை புறக்கணித்ததால், கூட்டணியில் இருந்து ம.தி.மு.க., வெளியேறும் சூழல் ஏற்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்களில் கூறுகின்றனர்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, தி.மு.க., சட்டத்துறை சார்பில், சென்னையில் நேற்று முன்தினம் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பங்கேற்க, கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி களுக்கும், தி.மு.க., அழைப்பு விடுத்தது. பங்கேற்கும் கட்சிகளின் தலைவர்களின் பெயர்களும், நாளிதழ்களில் விளம்பரமாக வெளியிடப்பட்டன. பங்கேற்கவில்லை
அதில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பெயர் அல்லது அக்கட்சியின் முதன்மை செயலரும், திருச்சி எம்.பி., யுமான துரை பெயரும் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.இதனால் வைகோவும், துரையும் தி.மு.க., தலைமை மீது கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து, ம.தி.மு.க., தலைமை அலுவலகமான தாயகம் அமைந்துள்ள இடத்துக்கு அருகில் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன் நடந்த தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில், ம.தி.மு.க., சார்பில் யாருமே பங்கேற்கவில்லை.இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:வைகோ, துரை ஆகிய இருவரும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்த அன்று சென்னையில் தான் இருந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் போராட்டத்தில் பங்கேற்க விரும்பவில்லை. இதனால், கட்சியின் மாநில நிர்வாகி ஒருவரை அனுப்பி வைக்கலாமா என யோசித்தனர். அதற்கு முன்னதாக, கட்சி சார்பில் மாநில நிர்வாகி ஒருவரை உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுப்பி வைக்க வைகோவும், துரையும் விரும்புவதாக தி.மு.க., தரப்புக்குச் சொல்லி அனுப்பினர். ரசிக்கவில்லை
இருந்த போதும், மாநில நிர்வாகி பெயரையும் அழைப்பிதழில் போட தி.மு.க., மறுத்துஉள்ளது. இதனால், தி.மு.க., தரப்பு மீது இருவரும் கடும் கோபத்திலும், அதிருப்தியிலும் உள்ளனர். 'விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிட்டிருக்க வேண்டும். தி.மு.க.,வுக்கு மாற்று அ.தி.மு.க., தான் என்றே அடித்துச் சொல்வேன்' என, மதுரையில் துரை அளித்த பேட்டியில் கூறினார். இப்படி அவர் பேட்டியளித்திருப்பதை தி.மு.க., தரப்பு ரசிக்கவில்லை. காரணம், அது அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக இருப்பதாக நினைக்கின்றனர்.இப்படி இருதரப்புக்கும் இடையே கசப்புகள் அதிகமாகிக் கொண்டே செல்வதால், கூட்டணியை விட்டு செல்ல ம.தி.மு.க., முடிவெடுத்து விட்டதோ என தி.மு.க.,வும், தங்களை திட்டமிட்டே கூட்டணியை விட்டு வெளியே அனுப்ப தி.மு.க., முயற்சிக்கிறதோ என ம.தி.மு.க.,வும் நினைக்கின்றன.இதற்கிடையில், ஒருவேளை, தி.மு.க., கூட்டணியை விட்டு ம.தி.மு.க., வெளியேறினால், அக்கட்சியை தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ள அ.தி.மு.க., தரப்பில் முயற்சிக்கின்றனர்.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.
புறக்கணித்தோம்!
ம.தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், 'நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்குப் பின், தி.மு.க., எங்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. குறிப்பாக, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, எங்களை தி.மு.க., தலைமை அழைக்கவில்லை. 'அழைக்காத இடத்துக்கு எப்படி செல்வது? அதனால், எங்கள் கட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதியிலேயே நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நாங்கள் புறக்கணித்து விட்டோம். ம.தி.மு.க., தலைவர்கள் மட்டுமல்ல; வழக்கறிஞர்கள் அணியினரும் புறக்கணித்து விட்டனர். மற்றபடி கூட்டணிக்கு முழுக்கு போடும் அளவுக்கு, இப்போதைக்கு பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை' என்றனர்.