ஆர்வம் காட்டும் அன்னிய முதலீட்டாளர்கள்
புதுடில்லி,;இந்திய பங்குச் சந்தையில், கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த வர்த்தக வாரத்தில் மட்டும் 4,897 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை, அன்னிய முதலீட்டாளர்கள் வாங்கி இருப்பதாக, தேசிய பத்திர பாதுகாப்பு நிறுவனத்தின் தரவுகளில் இருந்து தெரியவந்து உள்ளது.அன்னிய முதலீட்டாளர்கள், கடந்த ஆக.,19 முதல் 23ம் தேதி வரையிலான காலத்தில், 4,897 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கி உள்ளனர். அதே சமயம், ஆக.,12 முதல் -17 வரையிலான முந்தைய வாரத்தில், 7,770 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்றிருந்ததனர். கடந்த வாரத்தில் அன்னிய முதலீடு, ஓரளவுக்கு அதிகரித்து இருந்தாலும், சந்தையில், ஒட்டுமொத்தமாக நடப்பு ஆகஸ்ட் மாதத்தில், 16,305 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை, அன்னிய முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர். மாறாக, உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டுஉள்ளனர். நடப்பு ஆகஸ்ட் மாதத்தில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் இதுவரை 47,080 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கி உள்ளனர்.கடந்த ஜூலையில், இந்திய பங்குச் சந்தையில், அன்னிய முதலீட்டாளர்களின் நிகர முதலீடு 32,365 கோடி ரூபாயை எட்டியிருந்தது.