ஈடன் கடற்கரை மீது சிறகடிக்கும் பட்டங்கள் களை கட்டும் சர்வதேச காற்றாடி திருவிழா
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
அரியாங்குப்பம்: புதுச்சேரி ஈடன் கடற்கரையில் நடக்கும் சர்வதேச பட்டம் பறக்க விடும் திருவிழா, குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளது.புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சின்ன வீராம்பட்டினம், ஈடன் கடற்கரையில், தனியார் நிறுவனம் சார்பில், சர்வதேச அளவிலான பட்டம் பறக்கும் விடும் திருவிழா, நேற்று மதியம் 2:00 மணிக்கு, துவங்கியது. நிகழ்ச்சியில், 8 நாடுகளை சேர்ந்த பட்டம் வல்லுநர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பட்டத்தை பறக்க விட்டனர்.இதில் மீன், ஆமை, ஆக்டோபஸ், திமிங்கலம், சுறா உள்ளிட்ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் வானத்தில் பறப்பது போல, ராட்சத பலுான்கள் வடிவமைத்து, காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. விழாவில், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், பாஸ்கர் எம்.எல்.ஏ., சுற்றுலாத்துறை செயலர் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி, இரவு 7:00 மணி வரை நடந்தது. இந்த பட்டம் விடும் திருவிழா, நாளையுடன் நிறைவு பெறுகிறது. இத்திருவிழாவில், 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, வானத்தில் பட்டங்கள் பறக்கும் அழகை கண்டு ரசித்தனர். இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், 'இது போன்ற நிகழ்ச்சி சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் நடக்கிறது. புதுச்சேரியில் இந்த ஆண்டு, 'அக்வாரியம் ஸ்கை' என்ற பெயரில், இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், பலுான் மூலம் உருவாக்கப்பட்ட மீன் உள்ளிட்ட, வடிவிலான, 150 பட்டங்கள் வானத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன' என்றனர்.இத்திருவிழா, நாளை 25ம் தேதி, வரை ஈடன் கடற்கரையில் நடக்கிறது. நிகழ்ச்சி மதியம் 2:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை நடக்கிறது.