கோவை: கோவையில் நேற்று நடந்த, முன்னாள் அமைச்சர் வேலுமணியின் இல்ல திருமண விழாவில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர். இது, 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு அடித்தளமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uem8mlg1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணியின் மகன் விஜய் விகாஷ் - தீக்சனா திருமண விழா, கோவையில் நேற்று கோலாகலமாக நடந்தது; வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. குடும்ப நிகழ்ச்சி
கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். கட்சியின் பொதுச்செயலரான பழனிசாமி பங்கேற்கவில்லை. அவரது மனைவி ராதா மற்றும் மகன் மிதுன் கலந்து கொண்டனர். கட்சியினருக்காக, 10ம் தேதி நடத்தப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில், பழனிசாமி பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. குடும்ப நிகழ்ச்சி என்ற போதிலும், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் செங்கோட்டையன் ஒன்றாக வந்திருந்தனர்; அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். முன்னாள் அமைச்சர்கள் அன்பழகன், நத்தம் விஸ்வநாதன், தாமோதரன், ஆனந்தன், ராதாகிருஷ்ணன், செ.ம.வேலுசாமி உள்ளிட்டோரும் இருந்தனர். கட்சியின் பொதுச்செயலரான பழனிசாமி பங்கேற்காதது, அரசியல் நோக்கர்கள் மத்தியில் நெருடலாகவே பார்க்கப்படுகிறது. அண்ணாமலை பங்கேற்பு
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன், முன்னாள் கவர்னர் தமிழிசை மற்றும் மாவட்ட நிர்வாகிகள், நேற்று முன்தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தனர். அவர்களை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து நின்று வரவேற்றனர். முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவரிடமும் அண்ணாமலை கைகுலுக்கி பேசினார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், செ.ம.வேலுசாமி மற்றும் ராதாகிருஷ்ணனிடம் அண்ணாமலை காட்டிய நெருக்கம், அவர்களிடம் ஏற்பட்ட முக மலர்ச்சி, அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதன்பின், மணமக்களுக்கு மஞ்சள் கொடுத்து, அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தார். அவருடன் வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் உறவினர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர். அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, நடிகர்கள் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், யோகிபாபு, வையாபுரி, டைரக்டர் உதயகுமார், சுந்தர்ராஜன், சுசீந்திரன், சுந்தர்.சி ஆகியோரும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். 'வந்திருக்க வேண்டும்'
அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:அ.தி.மு.க.,வின் முதுகெலும்பாக இருந்து, கட்சியை வழிநடத்தும் நிர்வாகிகளில் முக்கியமானவர் வேலுமணி. அவரது மகன் திருமண நிகழ்ச்சிக்கு, கட்சியின் பொதுச்செயலர் என்ற முறையில் பழனிசாமி வந்திருக்க வேண்டும். அவரே தாலி எடுத்துக் கொடுத்து, திருமணத்தை நடத்தி வைத்திருக்க வேண்டும். ஜெயலலிதா இருந்த போது, திருமணம் நடந்திருந்தால், அவர் நிச்சயம் திருமணத்தை நடத்தி வைத்திருப்பார். 'வேலுமணி, பா.ஜ.,வுடன் நெருக்கமாக இருக்கிறார்' என, பழனிசாமிக்கு அவர் மீது லேசான வருத்தம் இருக்கும் சூழ்நிலையில், அவருடைய இல்லத் திருமணத்துக்கு வராமல் மகனையும் மனைவியையும் அனுப்பி வைத்தது, வேலுமணி ஆதரவாளர்களுக்கு, பழனிசாமி மீது லேசான வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
கட்சியினருக்காக வரவேற்பு நிகழ்ச்சி
அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு, பிரத்யேகமாக, வரும், 10ல் கோவை 'கொடிசியா' ஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடத்தப்படுகிறது. கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமின்றி, மாநிலம் முழுதும் உள்ள நிர்வாகிகளுக்கு வேலுமணி அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார். இதனால், மிகப் பெரிய அளவில் அங்கு அனைத்துக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும், தலைவர்களும் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஈஷாவில் நடந்த சந்திப்பு!
சில நாட்களுக்கு முன், ஈஷாவில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அதில், முன்னாள் அமைச்சர் வேலுமணியும் கலந்து கொண்டார். அன்றிரவு அமித் ஷா ஓய்வெடுத்த அறைக்குச் சென்று, எட்டு நிமிடங்கள் சந்தித்து பேசியுள்ளார். அமித் ஷாவுடன் சந்திப்பு, அண்ணாமலை வருகையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, 2026 சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைவதற்கு, வேலுமணி இல்லத்திருமண விழா அடித்தளமாக அமையுமோ என்ற எதிர்பார்ப்பு, கட்சியினரிடம் எழுந்திருக்கிறது.