உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நாட்டு மரங்களும் இனி தேக்கு மரங்களாக மாறும்! ஜப்பான் தொழில்நுட்பத்தில் பதப்படுத்தும் மையங்கள் அமைப்பு

நாட்டு மரங்களும் இனி தேக்கு மரங்களாக மாறும்! ஜப்பான் தொழில்நுட்பத்தில் பதப்படுத்தும் மையங்கள் அமைப்பு

தஞ்சாவூர், : இந்தியாவில், தேக்கு, சிவப்பு சந்தனமரம், சால், ரோஸ்வுட் ஆகிய மரங்கள் தான் பிரைமரி மரங்களாக உள்ளன. இவற்றில் தான் அதிகளவில் வீட்டு உபயோக பொருட்கள் செய்யப்படுகின்றன. தற்போது தேக்கு, சிவப்பு சந்தனமரம், சால், ரோஸ்வுட் மரங்கள் கிடைப்பது அரிதாக உள்ளது.இந்த நான்கு மரங்களின் குணம் கொண்ட மரங்கள் நம் ஊரில் கிடைக்கின்றன. இந்த மரங்களை பயன்படுத்த, மரங்களை பதப்படுத்தும் தொழில்நுட்பம் தான் கைக்கொடுக்கும் என, வனத்துறை ஆய்வுகள் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது.இதற்காக, தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ், மரங்களை பதப்படுத்துதல் மற்றும் மேம்பாட்டு மையங்களை ஜப்பான் சர்வதேச கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிதியுதவிடன் கூடிய தொழில்நுட்பத்தோடு, தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், திருநெல்வேலி மாவட்டங்களில் விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர உள்ளது. இதில், தஞ்சாவூர் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. தயாரான ஆலையை, ஜப்பான் சர்வதேச கார்ப்பரேஷன் நிறுவன பிரதிநிதிகளான ஷிகாவா ஷேயா, சித்தார் பரமேஸ்வரன் ஆகியோர் சில நாட்களுக்கு முன் ஆய்வு செய்தனர்.

மாவட்ட வன அலுவலர் ஆனந்த்குமார் கூறியதாவது:

வீடுகளில் குளிர் காலத்தில் கதவு, ஜன்னல்கள் வீக்கமாகவும், வெயில் காலத்தில் சுருங்கியும் காணப்படும். இதற்கு காரணம் கதவு, ஜன்னல் உள்ளிட்ட வீட்டு உபயோகத்திற்கு தயார் செய்யும் மரத்தில் குறைந்தது 10 முதல் 12 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். ஆனால், நாம் முறையாக காய வைப்பது கிடையாது.ஒரு மரத்தை வெட்டும் போது, 60 முதல் 70 சதவீதம் ஈரப்பதம் இருக்கும். இதை சதாரணமாக வெயிலில் காயவைத்தால், 30 சதவீதம் ஈரப்பதமாக தான் குறையும்.இந்நிலையில், 10 சதவீதம் அளவுக்கு ஈரதப்பத்தை கொண்டு வருவதற்கு தான் மரப்படுத்துதல் தொழில்நுட்பத்தை வனத்துறை கொண்டு வந்துள்ளது. இதற்கு, ஜப்பான் நிறுவனம் நிதியுதவி அளித்துள்ளது.இந்த தொழில்நுட்பத்தால், நம் நாட்டு மரங்களான புங்கன், நீர்மருது, வேம்பு, பூவரசு, பலா, வாகை, அருளி, மலையுவா ஆகிய மரங்களின் தரத்தை, தேக்குமரத்துக்கு ஈடாக செயற்கை முறையில் மேம்படுத்திக் கொள்ள முடியும்.இந்த தொழில்நுட்ப முறைகளை வெளிநாடுகளில் பயன்படுத்தி வருகின்றனர்.தமிழகத்தில் ஐந்து இடங்களில் மரங்களை பதப்படுத்தி வழங்கும் தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான கட்டணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பதப்படுத்தும் முறை இது தான்!

முதல்கட்டமாக, மரப்பலகை, துண்டுகளை, குறைந்தது ஒரு வாரம் தண்ணீரில் ஊறவைத்து, பின், உருளை வடிவிலான இயந்திரத்தில், ஈரப்பதத்தை கட்டுப்படுத்துவதற்காக குறைந்தது 2 -- 6 நாட்களுக்கு மரங்களை வைத்து, காற்றின் அழுத்தம் மற்றும் 100 டிகிரி வெப்ப நிலையில் வைத்து ஈரப்பதம் குறைக்கப்படும். பின், ஈரப்பதத்தின் தன்மைக்கு ஏற்ப,குரோமேட்டட் காப்பர் ஆர்சனேட் அல்லது காப்பர் -குரோம்-போரான் மற்றும் போரிக் அமிலம் போன்ற பல்வேறு வேதி பொருட்களை பயன்படுத்தி வெப்பத்தால் மரங்கள் உலர்த்தப்படும். இதற்கான இயந்திரங்கள் தஞ்சாவூரில் சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டு வருகிறது.இந்த முறையில் மரத்தை பதப்படுத்தினால், சாதாரணமாக ஒரு மரபலகை ஐந்தாண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்குமானால், அதன் ஆயுள் 25 -- 30 ஆண்டுகள் வரை நீடிக்கும். மேலும், கரையான், பூஞ்சை, மரபூச்சி தாக்குதல் இருக்காது. மரத்தை இழைக்கும் போது எளிதாகவும், முழுமையாகவும் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Thiruppathi raj
மார் 11, 2025 10:34

இது நமது கலாச்சாரத்தில் உள்ள பழைய முறைதான். தற்போது மெஷின் வடிவில் கொண்டு வந்துள்ளனர். நாம் முன்பு வீடு கட்டும் போது அதற்கான. மரங்களை எடுத்து வந்து மரங்களை அறுத்து 10முதல் 20நாட்கள் வரை பெரிய தொட்டியில் உள்ள நீரிலோ,தண்ணீர் உள்ள கிணற்றிலோ ஊர வைத்து பின் அவற்றை வெயிலில் காயவைத்து அதன் வளைவை சரி செய்ய மரத்தின் மேல் எடைவைப்பார்கள். பின் காய்ந்ததும் இழைத்து கதவு, நிலை, ஜன்னல்களாக மாற்றுவார்கள். தற்போது அந்த பழக்கம் மறைந்து விட்டது. அதில் அனுபவம் உள்ள ஆசாரிகளும் இல்லை.


Karthik
மார் 10, 2025 09:58

ஆஹா..அருமை. அனைவர்க்கும் பயனுள்ள ஒன்று. ஆனால் கட்டணம் தான் தெரியல.