உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வீடு விற்பனை ஒப்பந்தத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்: முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு கிடுக்கி

வீடு விற்பனை ஒப்பந்தத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்: முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு கிடுக்கி

சென்னை : வீடு, மனை விற்பனையில் முறைகேடுகளை தடுக்கவும், நுகர்வோர் நலன் பாதுகாப்புக்காக விற்பனை ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கும், புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

ரியல் எஸ்டேட் சட்டம்

நாடு முழுதும் வீடு, மனை விற்பனையில் நடைபெறும் தவறுகளை தடுக்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், 2016ல் ஏற்படுத்தப்பட்டது. இதன் அமலாக்கத்துக்காக, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தீர்ப்பாயங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த சட்டத்தின்படி, எட்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வீடு, மனை அடங்கிய திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள், அதை ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில் குறிப்பாக, வீடு, மனை விற்பனைக்கான முன்பதிவு செய்வதில் துவங்கி, ஒப்படைப்பு வரையிலான பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடக்க வேண்டும். கட்டுமான ஒப்பந்தம், கிரைய பத்திரம் ஆகியவற்றில் சட்ட ரீதியாக இடம்பெற வேண்டிய விஷயங்கள் ரியல் எஸ்டேட் சட்டத்தில் வரையறுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் வீடு அல்லது மனையை வாங்க ஒருவர் முடிவு செய்யும் நிலையில், அதற்கான விலையில் குறைந்தபட்ச தொகையை செலுத்தி ஒப்பந்தம் மேற்கொள்வார். இந்த ஒப்பந்தம் தற்போது வரை சாதாரண முறையிலேயே இருக்கிறது. கிரைய பத்திரம், கட்டுமான ஒப்பந்தத்துக்கு இணையாக, இதில் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தின் அமலாக்கம் குறித்து, மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக உயரதிகாரிகள் குழு சமீபத்தில் ஆய்வு செய்தது. அதில், வீடு, மனை விற்பனை ஒப்பந்தம் பதிவு தொடர்பாக சில விஷயங்களை, அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

புதிய வழிகாட்டுதல்கள்

இது தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், முக்கிய முடிவுகள் எடுக்க முடியாது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், விற்பனை ஒப்பந்த ஆவணத்தை தயாரிப்பது, பதிவு செய்வதில் சட்ட ரீதியாக சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று, அவர்கள் பரிந்துரைத்தனர். விற்பனை ஒப்பந்தத்தை பதிவு செய்யும்போது, அதில் வீடு வாங்குவோர் நலனை பாதுகாக்க பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் சேர்க்கப்பட உள்ளன. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை விரைவில் அனுப்ப இந்த கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநில ரியல் எஸ்டேட் ஆணையங்கள், ரியல் எஸ்டேட் அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்துகளையும் கேட்பது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.தேர்தல் நடைமுறைகள் முடிந்ததும், இதற்கான கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ