முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் அரசியல் பயணம், திசை தெரியாத பயணமாக உள்ளதால், அவரது ஆதரவாளர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தான் நீக்கப்பட்டதை எதிர்த்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நிலுவையில் உள்ள இந்த வழக்கில் எப்போது தீர்ப்பு வரும் என்று யாருக்கும் தெரியாது.இதனால், தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து, 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு'வை பன்னீர்செல்வம் துவக்கினார்; நிர்வாகிகளை நியமித்தார். அ.தி.மு.க., மாவட்டச் செயலர்களுடன் ஒத்துப்போக முடியாதவர்கள், பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர்.லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட பன்னீர்செல்வம் வெற்றி பெறுவார்; மத்திய அமைச்சராவார்; அரசியலில் வாழ்வு கிடைக்கும் என, அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், தோல்வி தான் கிடைத்தது. அதேநேரம், அ.தி.மு.க., அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது, பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு சின்ன ஆறுதலை தந்தது. தேர்தல் தோல்வியால், அ.தி.மு.க., தலைமை பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை கட்சியில் சேர்க்க முன்வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப, முன்னாள் அமைச்சர்கள் சிலர், பன்னீர்செல்வத்தை சேர்க்க வலியுறுத்தினர். ஆனால், பழனிசாமி அதை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் சோர்வடைந்த பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், தினகரன், சசிகலா ஆகியோர் பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து, பழனிசாமிக்கு நெருக்கடி கொடுப்பர் என, எதிர்பார்த்தனர். ஆனால், தான் துவக்கிய அ.ம.மு.க., தனித்து செயல்படும் என, தினகரன் அறிவித்து விட்டார். பழனிசாமி தன் தலைமையை ஏற்பார் என்ற எதிர்பார்ப்பில், பன்னீர்செல்வத்தை சந்திக்க சசிகலா மறுக்கிறார். பாதிக்கப்பட்ட மூவரும் தனித்தனியே நிற்பதால், அவர்களின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தனிக்கட்சி துவங்குங்கள் என கூறும் ஆதரவாளர்களிடம், 'நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், தனி கட்சி துவங்க முடியாது. அ.தி.மு.க., நம்மிடம் வரும்; பொறுத்திருங்கள்' என, பன்னீர்செல்வம் அமைதிப்படுத்துகிறார். இது எப்போது நடக்கும் என்பது தெரியாத நிலையில், பன்னீர்செல்வம், சசிகலா ஆதரவாளர்கள், என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து வருகின்றனர். பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்த ஜெ.சி.டி.பிரபாகர், புகழேந்தி ஆகியோர் தனியே பிரிந்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில், கட்சியை ஒருங்கிணைக்கப் போவதாக அறிவித்தனர். அவர்களாலும் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை. முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அமைதியாகி விட்டார். மற்றவர்கள், பன்னீர்செல்வம் தங்களை கரை சேர்க்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அவர்களின் மனக்குமுறலை, பன்னீர்செல்வம் ஆதரவாளராக மருது அழகுராஜ், தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா என மூவரையும் பழனிசாமி தான் ஒன்று சேர்த்து பேசுகிறாரே தவிர, இன்று வரை மூன்று பேரும் ஒன்றாக சேரவில்லை; குறைந்தபட்சம் ஒன்றாக சந்தித்து பேசுவதைகூட தவிர்ப்பது ஏன் என்று புரியவில்லை.ஒற்றுமை தான் இலக்கு என்பதை முன்னெடுப்பவர்களிடமே ஒற்றுமை இல்லையே என்னும் ஏளனங்களை எளிதாக கடந்து போக முடியவில்லை. இது எங்க குடும்பம் என, சசிகலாவின் வசனத்தை சொல்லி சமாளிக்க பார்த்தால், 'அப்ப ஒற்றுமையை உங்கள் குடும்பத்தில் இருந்து முதலில் துவக்குங்கள்' என, நக்கல் அடிக்கின்றனர். தலைவர்கள் கீழே உள்ளவர்களை ஒற்றுமையாக இருங்கள் என சொன்ன காலம் போய், இப்ப கீழே உள்ள ஆட்கள் கூடி, தலைவர்களே ஒற்றுமையாக இருங்கள் என்று வேண்டுகிற காலம் வந்திருப்பது பரிதாபமே.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.- நமது நிருபர் -