சென்னை: மேக வெடிப்பு போன்ற திடீர் மாற்றங்களால் பெய்யும் அதிக மழையை கருத்தில் கொண்டு, வடிகால் அமைப்புகளை மேம்படுத்த, மூன்றாவது முழுமை திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை பெருநகருக்காக, கடந்த 2008ல் அறிவிக்கப்பட்ட இரண்டாவது முழுமை திட்டம், காலாவதியாகி உள்ளது.இதையடுத்து, உலக வங்கி வழிகாட்டுதல் அடிப்படையில், 2027 - 2046 வரையிலான காலத்திற்கு, மூன்றாவது முழுமை திட்டம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. திட்டங்கள் தயாரிப்பு
இதில், எந்தெந்த பகுதிகளுக்கு என்ன வகையான திட்டங்கள் தேவை என்பதை அறிய, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஒவ்வொரு பகுதிக்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், சில ஆண்டுகளாக திடீரென அதிக அளவு மழை பெய்து வருகிறது. உதாரணமாக தாம்பரம், சோழிங்கநல்லுார், செம்பரம்பாக்கம் போன்ற இடங்களில், சில மணி நேரங்களில், 30 செ.மீ., வரை மழை பெய்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் பி.விஸ்வநாதன் என்பவர் கூறியதாவது:வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, மேக வெடிப்பு போன்ற நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதனால், குறிப்பிட்ட சில இடங்களில் குறைந்த நேரத்தில், அதிக அளவு மழை கொட்டித் தீர்க்கிறது. இவ்வாறு அதிக மழை கொட்டும்போது, அதனால் கிடைக்கும் நீரை தேக்கி வைக்கவும், உபரி நீரை வெளியேற்றவும் உரிய வசதிகள் இல்லை. இதனால், எதிர்பாராத வகையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்படும் நிலை ஏற்படுகிறது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை, நீர்வளத்துறை சார்பாக, பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டு வருகின்றன.கடந்த சில ஆண்டுகளாக, பெரிய அளவிலான மழைநீர் கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன.இந்த கால்வாய்களில் தற்போது, மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு கழிவுநீரும், சேறும் தான் உள்ளன. இதனால், இந்த கால்வாய்களில் முழு கொள்திறன் அளவுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, மேக வெடிப்பு உள்ளிட்ட பாதிப்புகளின் போது பெய்யும் அதிக அளவு மழையையும் கருத்தில் கொண்டு, வடிகால் கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும். இதற்கான நீண்ட கால திட்டமிடல் வேண்டும் என, சி.எம்.டி.ஏ.,வுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். சி.எம்.டி.ஏ., நடவடிக்கை
இதுகுறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அளித்த பதில்:அதிகளவு மழை குறித்த கருத்துகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். மூன்றாவது முழுமைத் திட்டத்தில், வடிகால் கட்டமைப்பு ரீதியான வசதிகளை ஏற்படுத்தும் வழிமுறைகள் சேர்க்கப்படும். இதற்கான நடவடிக்கை உரிய முறையில் எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அமெரிக்க உதவியுடன் மேம்பாடு
சென்னையில் உள்ள நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் தொடர்பாக, அமெரிக்க குழுவுடன், மாநகராட்சி மேயர் பிரியா ஆலோசனை நடத்தினார்.சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீர்நிலைகளை மேம்படுத்துதல், நகர்ப்புற சுற்றுச்சூழல் மேம்பாடு, நகர்ப்புற திட்டமிடல் தொடர்பாக ஆய்வுக் கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.இதில், பெருங்கடல்கள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஜெனிபர் ஆர்.லிட்டில் ஜான், அமெரிக்க துணை துாதர் கிறிஸ் ஹாட்ஜஸ் ஆகியோர் பங்கேற்றனர்.ஆய்வு குறித்து, மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:சென்னை மாநகராட்சியில் நிலப்பரப்பு மற்றும் 2015 முதல் 2023 வரை பெய்த மழை அளவு, 2005, 2008, 2015, 2020, 2021ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள், அவற்றை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.சென்னையில் உள்ள நீர்நிலைகள், அதன் துணை கால்வாய்களுடன், மழைநீர் வடிகால் கட்டமைப்பு, நீர் உறிஞ்சும் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கூவம், அடையாறு, பகிங்ஹாம், கிளைக் கால்வாய்கள் கழிவுநீர் வெளியேறுவது குறைக்கப்பட்டு வருகிறது. நீர்நிலைகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை, கழிவுகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப்பின், நேப்பியர் பாலம் அருகே உள்ள கூவம் ஆற்றின் முகத்துவாரத்தை, அக்குழுவினர் ஆய்வு செய்தனர். அதன் வாயிலாக, சென்னையில் உள்ள நீர்நிலைகள், அமெரிக்க உதவியுடன் மேம்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.