தமிழகத்தில் விவசாயிகள் படும் துன்பங்கள் என்ன, தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை எத்தனை?' என்று கேள்வி கேட்டு, சொந்த கட்சியான தி.மு.க., தரப்பையே அதிர்ச்சியில் ஆழ்த்தப் பார்த்த, கொங்குமண்டல தி.மு.க., - எம்.பி.,யை 'காப்பாற்றி', அவரை சக மூத்த எம்.பி.,கடுமையான டோஸ் விட்ட சம்பவம், பார்லிமென்ட் வட்டாரங்களில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன் ஸ்டார் கேள்வி
பார்லிமென்ட் கேள்விகளில், 2 வகைகள் உண்டு. ஒன்று ஸ்டார் கேள்விகள். இன்னொன்று, அன் ஸ்டார் கேள்விகள். கேள்வி நேரம் நடைபெறும்போது, ஸ்டார் கேள்விகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டு, எம்.பி.,க்கள் கேள்வி கேட்க, அதற்கு அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். அன் ஸ்டார் கேள்விகளுக்கு, நேரடியாக சம்பந்தப்பட்ட எம்.பி.,க்கு பதில்கள் அனுப்பி வைக்கப்படும். கேள்வி நேர அலுவல்களின்போது, இவை எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. கடும் அதிர்ச்சி
நடப்புக்கூட்டத் தொடரில், லோக்சபா ஸ்டார் கேள்விகளின் பட்டியலில், கொங்கு மண்டல எம்.பி., ஒருவர், 'தமிழகத்தில் விவசாயிகள் படும் இன்னல்கள், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை, இவர்களது தற்கொலைக்கான காரணங்கள் என்னென்ன?' என்று கேட்டிருந்தார்.இந்த கேள்விப் பட்டியல் வெளியான அன்று காலையில், பலருக்கும் ஆச்சரியம். தி.மு.க., மூத்த எம்.பி.,க்கள் தரப்புக்கோ கடும் அதிர்ச்சி. தமிழகத்தில் நடப்பதோ நம்முடைய ஆட்சி. அங்கு எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்ற பட்டியலை, நம் கட்சிக்காரரே கேட்பதா? என்பதுதான் அதிர்ச்சிக்கான காரணம். திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற தகவல் பார்லி.,யிலேயே ஊர்ஜிதமாகி விடுமே என அச்சப்பட்ட மூத்த எம்.பி.,க்கள் புதிய எம்.பி.,யை வரவழைத்து, கடுமையாக திட்டித் தீர்த்தனர். அந்த புதுமுக எம்.பி.,யை நாள் முழுதும் சபை பக்கம் வராமல் பார்த்துக் கொண்டனர். இதனால், எம்.பி., ஆப்சென்ட் என்று தெரிந்து, சபாநாயகர் அடுத்த கேள்விக்கு போய் விட்டார். இதனால் அந்த கேள்வியும், அதற்கான பதிலும் பார்லி.,யில் பேசப்படாமல் அமுங்கி போய் விட்டது. டி.வி.,யிலும் நேரடியாக ஒளிபரப்பாகாததால், பிரச்னை அப்படியே அமுங்கி போய் விட்டது. இல்லையென்றால், தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கும். பார்லி.,யில் ஏன் இப்படி நடக்கிறது என விபரங்கள் அறிந்த எம்.பி., ஒருவர் கூறியதாவது:முன்பெல்லாம் எம்.பி.,க்கள் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்களை பி.ஏ.,க்களாக வைத்துக் கொண்டு, பார்லி.,யில் பேச வேண்டியவைகள் குறித்து கலந்தாலோசித்து முடிவெடுப்பர். எழுப்ப வேண்டிய கேள்விகளையும் அவர்கள்வாயிலாகவே தயார் செய்து வாங்கிக் கொள்வர்.ஆனால் தற்போது, அரசியலை அரைகுறையாகத்தெரிந்த தரகர்கள் வாயிலாக கேள்விகள் தயார்செய்கின்றனர். இதனா லேயே இதுபோன்ற அபத்தங்கள் நிகழ்கின்றன. கேள்விகள், உரைகள் தயாரிக்க நல்ல விஷய ஞானம் உள்ள உதவியாளரை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, 40,000 ரூபாயை சம்பளத்துக்காக, ஒவ்வொரு எம்.பி.,க்கும் அரசே மாதந்தோறும் கொடுக்கிறது. ஆனால், அப்படி செய்யாமல், பல எம்.பி.,க்கள் பணத்தை அமுக்கி விடுகின்றனர். இதனால்தான் தமிழக எம்.பி.,க்கள் உள்ளிட்ட பல மாநில எம்.பி.,க்களும் பார்லிமென்ட்டில் 'பல்பு' வாங்குவது தொடர்கதையாக நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஜெ., அதிருப்தியை சம்பாதித்த அன்வர் ராஜா!
முன்பு ௧௬வது லோக்சபாவில், ராமநாதபுரம் எம்.பி.,யாக இருந்த அன்வர் ராஜா, ''தனுஷ்கோடிக்கும் இலங்கைக்கும் இடையில், கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படுமா?'' என்று கேள்வி எழுப்பினார். அப்போது கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சராக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார். ஜெயலலிதாவின் அதிருப்தியை சந்திக்கும் விதமாக அ.தி.மு.க., - எம்.பி.,யே கேட்கிறாரே என புரிந்து கொண்ட அவர், மழுப்பலாக பதில் அளித்தார். ஆனாலும், கட்சி மேலிடத்தில் இருந்து அன்வர் ராஜாவுக்கு டோஸ் விழுந்துள்ளது. -நமது டில்லி நிருபர்-