திரையுலகில் நடிகர் விஜய் இடத்தை பிடிக்க, நடிகர் சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ள நிலையில், அவரை தி.மு.க., அனுதாபியாக மாற்றும் முயற்சியில் அக்கட்சியின் மேலிடம் ஈடுபட்டுள்ளது.சமீபத்தில் தனியார் 'டிவி' சேனல் நடத்திய விருது வழங்கும் விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், 'சினிமாவில் இருக்கும் அரசியலை சமாளிக்க பெரும்பாடு படுகிறேன். 'சினிமாவில் இவ்வளவு அரசியல் இருப்பதால்தான், நடிகர்கள் அரசியலுக்கு சென்று, அரசியல் செய்கின்றனர்' என்றார். எனவே, அரசியலுக்கு வரும் எண்ணத்தை மறைமுகமாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார் என, அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி துவக்கியுள்ளார். அவரும், சினிமாவை விட்டு விலகினால், அவரது இடத்தை பிடிக்க சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ பட்டியலில், தன் பெயர் இடம் பெறும் வகையில், தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள, அமரன் படத்தை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியும் பார்ப்பதற்கு, சிவகார்த்திகேயன் விருப்பம் தெரிவித்துள்ளார். செப்., 22ல், தமிழக வெற்றிக் கழக மாநாடு விக்கிரவாண்டியில் நடக்கிறது. அம்மாநாட்டில், தி.மு.க., ஆட்சியை விஜய் விமர்சிப்பார் என, அவரது கட்சி தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். விஜய் மீது ஈர்ப்பாக இருக்கிற இளைஞர்கள், இளம் பெண்கள் சிவகார்த்திகேயனுக்கும் ரசிகர்களாக உள்ளனர். எனவே, சினிமா மற்றும் அரசியலில் விஜய்க்கு எதிராக சிவகார்த்திகேயனை கொம்பு சீவிவிட, தி.மு.க., மேலிடம் தயாராகியுள்ளது. இதற்காக, தி.மு.க., மேலிடத்திற்கு சொந்தமான சினிமா நிறுவனங்கள், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதுப் படங்களை எடுக்கவும் தயாராகியுள்ளன. முதல்வர் ஸ்டாலின், எம்.பி., தயாநிதி பங்கேற்ற விழாவில், சிவகார்த்திகேயனும் பங்கேற்று, இருவரையும் சந்தித்து பேசிய படங்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதற்கிடையில், தயாநிதி, தன் சமூக வலைதள பக்கத்தில், 'சிவகார்த்திகேயன் எளிமையானவர், இயல்பானவர், அன்பானவர். அவரது முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்' எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படி சிவகார்த்திகேயனை, தி.மு.க., அனுதாபியாக மாற்ற, அக்கட்சி மேலிடம் வியூகம் வகுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது- நமது நிருபர் -.