'ரஜினியிடம் துரைமுருகன் சமரசமாகவில்லை என்றால், அமைச்சர் பதவி அல்லது பொதுச்செயலர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்படும்' என, முதல்வர் ஸ்டாலின் தரப்பில் தகவல் எச்சரிக்கையாக தெரிவித்த பின், இருவரும் சமரசமான தகவல் வெளியாகி உள்ளது.சென்னையில் நடந்த அமைச்சர் எ.வ.வேலு எழுதிய, 'கலைஞர் எனும் தாய்' நுால் வெளியீட்டு விழாவில் ரஜினி பேசுகையில், 'தி.மு.க.,வில் நிறைய பழைய மாணவர்கள் இருக்கின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yzj9lke4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'ரேங்க் வாங்கிய பின்னும், வகுப்பறையை விட்டு செல்ல மறுக்கின்றனர். அவர்களை சமாளிப்பது சாதாரண விஷயமல்ல. அதை திறம்பட செய்யும் முதல்வருக்கு தலைவணங்குகிறேன்' என்றார்.இந்த பேச்சை கேட்டு, நிகழ்ச்சிக்கு வந்திருந்த முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சிரித்தபோதிலும், அங்கே வந்திருந்த தி.மு.க., சீனியர்களுக்கு முகம் வாடியது.பழைய மாணவர்கள் என, மூத்த அமைச்சர்களை பொதுவாக விமர்சித்ததோடு நில்லாமல், குறிப்பாக துரைமுருகன் பெயரை குறிப்பிட்டு ரஜினி பேசியதுதான், சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினியின் பேச்சால் கடும் கோபம் அடைந்த துரைமுருகன், அதை தன் வார்த்தைகளில் வெளிப்படுத்தினார். 'மூத்த நடிகர்களுக்கு வயதாகி, பல்லு விழுந்து, தாடி வளர்த்து சாகப்போகிற நிலையிலும் நடிப்பதால் தான், இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது' என, அடுத்த நாளே காட்டமாக பதிலடி கொடுத்தார். இதற்கிடையில், சென்னையில் நடந்த விழா ஒன்றில், அமைச்சர் உதயநிதி பேசுகையில், ''இளைஞர்கள் நம் பக்கம் வர தயாராக உள்ளனர். ''நாம் தான் அவர்களுக்கு வழிவிட்டு, அரவணைத்து வழிநடத்தி கைப்பிடித்து கூட்டிச் செல்ல வேண்டும்,'' என்று, நடிகர் ரஜினி கூறிய கருத்தையே மீண்டும் வேறு வார்த்தைகளில் பதிவு செய்தார். உதயநிதியின் பேச்சுக்கு துரைமுருகன் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. ஆனால், நடிகர் ரஜினிக்கு தன்னுடைய கருத்தை சொல்லி பதிலடி கொடுத்தார். ரஜினிக்கான துரைமுருகனின் பதிலடி அரசியல் அரங்கிலும், சினிமா வட்டாரங்களிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ரஜினியின் நகைச்சுவை பேச்சுக்கு, அவர் மனம் புண்படும் வகையில் அமைச்சர் பதில் பேசியிருக்க வேண்டியதில்லை என, மூத்த நடிகர்கள் சிலர் தங்களின் வருத்தத்தை முதல்வர் ஸ்டாலினிடம் வெளிப்படுத்தினர். ரஜினிக்காகவே அவர்கள் முதல்வரிடம் பேசிஉள்ளனர்.இதன் தொடர்ச்சியாக, முதல்வர் தரப்பிலிருந்து சிலர் துரைமுருகனிடம் பேசியுள்ளனர்.ஸ்டாலினின் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்ட அவர்கள், 'நடந்த விஷயத்துக்காக, நடிகர் ரஜினியை தொடர்பு கொண்டு பேசி வருத்தம் தெரிவியுங்கள்; இல்லையென்றால், அமைச்சர் பதவியையும் இழக்க வேண்டியிருக்கலாம்' என, எச்சரிக்கை விடுக்கும் தொனியில் முதல்வர் கருத்தாக சிலவற்றை சொல்லி உள்ளனர். முதலில் அதை ஏற்க மறுத்த துரைமுருகன், ரஜினியுடன் பேச ஒப்புக்கொண்டார். அதன்பின், முதல்வர் ஸ்டாலினும் துரைமுருகனிடம் பேசியதாக தகவல். அதையடுத்தே, ரஜினியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட துரைமுருகன், தன் வருத்தத்தை பதிவு செய்தார். 'உணர்ச்சிவயபட்ட நிலையில் சில வார்த்தைகளை சொல்லி விட்டேன். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். 'இப்படியொரு சம்பவம் நடந்ததற்காக வருத்தப்படுகிறேன்' என்று ரஜினியிடம் சொல்லியிருக்கிறார் துரைமுருகன். உடனே, 'நிகழ்ச்சியில் கருணாநிதியை பெருமைப்படுத்துவதற்காகவே நகைச்சுவையாக கருத்து சொன்னேன். 'என்னுடைய கருத்தில் யாரையும் வருத்தப்பட வைக்கும் உள்நோக்கம் இல்லை. தவறாக இருந்தால், அதற்காக நானும் வருத்தப்படுகிறேன்' என நடிகர் ரஜினியும் தன் பங்குக்கு துரைமுருகனை சாந்தப்படுத்தியுள்ளார். பின், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ''நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக்க வேண்டாம். நாங்கள் எப்போதும் போல் நண்பர்களாகவே இருப்போம். எங்களுக்குள் எந்த பிணக்கும் இல்லை,'' என்று சொல்லி, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் துரைமுருகன்.
வருத்தமில்லை'
படப்பிடிப்புக்காக, நேற்று காலை விமானம் வாயிலாக, ரஜினி விசாகப்பட்டினம் சென்றார். அப்போது, அவர் அளித்த பேட்டி: அமைச்சர் துரைமுருகன் என் நீண்ட கால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னைப் பற்றி அவர் என்ன சொன்னாலும், எனக்கு வருத்தம் எதுவும் கிடையாது. எங்களின் நட்பு எப்போதும் போல தொடரும். கட்சிக் கொடி மற்றும் பாடல் வெளியிட்டுள்ள விஜய்க்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -