தமிழகத்தில் ஏப்ரல் 19ல் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. ஓட்டுகள் பதிவான இயந்திரங்கள், லோக்சபா தொகுதிகளின் ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஏராளமான போலீசார் மூன்று ஷிப்டுகளாக, 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுதும் இந்த நடைமுறை தொடர்கிறது. தென்காசியில் மட்டும் இந்த நடைமுறை மாற்றப்பட்டு, இரு ஷிப்டுகளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். '24 மணி நேரமும் பணிபுரியும் சூழலால், கடும் மன உளைச்சல் மற்றும் உடல் நிலை பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறோம்' என, பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் கதறுகின்றனர். பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் கூறியதாவது:
தென்காசி தொகுதியில் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட ஓட்டு இயந்திரங்கள், கொடிக்குறிச்சியில் உள்ள யு.எஸ்.பி., பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. கல்லுாரியை சுற்றி, 300 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளோம். இரு ஷிப்டுகளாக பணி தரப்பட்டுள்ளது.
காலை 8:00 மணி ஷிப்டில் பணியாற்றுவோருக்கு, மதியம் 2:00 மணியில் இருந்து இரவு 8:00 மணி வரை ஆறு மணி நேரத்துக்கு ஓய்வு அளிக்கப்படும். பின், இரவு 8:00 மணிக்கு வந்தால், மறுநாள் காலை 8:00 மணி வரை பணியாற்ற வேண்டும் மதியம் 2:00 மணி ஷிப்டுக்கு வருவோருக்கு இரவு 8:00 மணி வரை, ஆறு மணி நேரம் தான் பணி; 18 மணி நேரம் வரை ஓய்வு கிடைக்கிறது. முதல் ஷிப்டில் பணியாற்றுவோர், மதியம் 2:00 மணிக்கு வெளியே வந்தால், 50 கி.மீ., வரை வீட்டுக்கு சென்று திரும்புகின்றனர். இதனால், அவர்கள் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் துாங்கவே முடியாமல் பணியாற்றும் சூழல் உருவாகி இருக்கிறது. இந்த நடைமுறையை மாற்றி, மூன்று ஷிப்டுகள் அடிப்படையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தால், ஒரு ஷிப்டில் பணியாற்றுவோர், எட்டு மணி நேர வேலை முடித்து, மற்ற நேரங்களில் வீட்டுக்கு செல்லவும், துாங்கவும் முடியும் என, கலெக்டர் கமல் கிஷோர் மற்றும் எஸ்.பி., சுரேஷ்குமார் ஆகியோரிடம் சொன்னோம்; ஆனால், கண்டு கொள்ளவில்லை.இதனால், தொடர்ச்சியாக துாங்காமல் வேலை செய்து, பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு ஆளாகி இருக்கிறோம்; உடல் நிலையும் பாதிக்கப்பட்டு உள்ளது. மிச்சமிருக்கும் நாட்களுக்காவது மாற்றம் செய்து கொடுத்தால் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
உரிய ஓய்வு நேரம் வழங்கப்படுகிறது
ஓட்டு எண்ணும் மைய பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கு, ஐந்து நாட்கள் மட்டுமே பணி. அடுத்த ஐந்து நாட்களுக்கு வேறொரு குழு பணிக்கு வந்து விடும். போலீஸ் பணி என்பது, 'ஒயிட் காலர்' பணி அல்ல என்பதை போலீசார் உணர வேண்டும். இந்த பிரச்னை குறித்து கலெக்டரும் கேட்டார். இருக்கும் போலீசாரை வைத்து, சிக்கல் இல்லாமல் செய்யப்பட்ட ஏற்பாடு இது என்றதும் ஏற்றுக் கொண்டார்.போலீசாருக்கு இடையில், ஆறு மணி நேரம் ஓய்வு அளிக்கத்தான் மதியம் 2:00 மணியில் இருந்து, 8:00 மணி வரை இடைவேளை தரப்படுகிறது. அது, துாங்குவதற்கான நேரம். அந்த நேரத்தில், அதை விடுத்து வீட்டுக்குப் போனேன்; வேறு வேலை பார்ப்பேன் என்று சொன்னால், அதற்கு நாம் எப்படி பொறுப்பாக முடியும்? குற்றவாளியை பிடிக்க வடநாட்டுக்கு போகும் போலீசார், நாள் கணக்கில் துாங்காமல், சரியான சாப்பாடு இல்லாமல் செயல்படுகின்றனர். அவர்கள் எல்லாம், தங்களுக்கான கஷ்டங்களை சொன்னால், குற்றவாளியை எப்படி பிடிப்பது; சட்டம் - ஒழுங்கை எப்படி காப்பது? போலீசுக்கு ஒரு நாளைக்கு, 2,000 ரூபாய் சம்பளம் வழங்குகிறோம். அதற்கான வேலையை அவர்கள் செய்கின்றனரா என்பதை, அவர்கள் தான் சொல்ல வேண்டும்.- சுரேஷ்குமார், எஸ்.பி., தென்காசி- நமது நிருபர் -