உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மத கூட்டங்களில் விபத்துகளை கட்டுப்படுத்த விதிமுறைகளை கடுமையாக்க வலியுறுத்தல்

மத கூட்டங்களில் விபத்துகளை கட்டுப்படுத்த விதிமுறைகளை கடுமையாக்க வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உத்தர பிரதேசத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் சிக்கி, 121 பேர் பலியான நிலையில், இது போன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க விதிமுறைகளை கடுமையாக்கி, கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில், போலே பாபாவின் சொற்பொழிவு நிகழ்ச்சி 2ம் தேதி நடந்தது.மொத்தம் 80,000 பேருக்கு அனுமதி பெற்றிருந்த நிலையில், கூட்டத்தில் 2.5 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியாகினர்.

பேரழிவுகள்

இந்த சம்பவம் நாடு முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.ஆன்மிக தலைவர்கள் அவ்வப்போது பொதுமக்களை சந்தித்து சொற்பொழிவு கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதில், பங்கேற்பதால் தங்கள் குறைகள் தீரும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கான மக்கள் அதில் கலந்து கொள்கின்றனர்.ஆனால், அவ்வாறு நடத்தப்படும் கூட்டங்களில் அடிப்படை தேவைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுகின்றனவா என்றால், இல்லை என்றே பதில் வருகிறது. இது போன்ற கூட்டங்கள் நடத்த, கூட்ட மேலாண்மை என்பது மிகவும் அவசியமான ஒன்று. கூட்டம் நடக்கும் நாள், இடம் உள்ளிட்டவை குறித்து திட்டமிடுதல் என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட வழிகாட்டி கையேட்டில், 'பொதுவாக கூட்டத்தால் ஏற்படும் பேரழிவுகள் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவுகளே' என தெரிவித்துள்ளது. இது போன்ற பேரிடர்கள், நன்கு பயிற்றுவிக்கப்பட்ட குழுக்களின் முறையான திட்டமிடல் மற்றும் கூடுதல் பணியாளர்கள் வாயிலாக தடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.மக்கள் கூடும் இடங்களில் நெரிசல் காரணமாக விபத்து ஏற்படுவதற்கு, அங்கு போதுமான கட்டமைப்பு இல்லாதது முக்கிய காரணம் என அந்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறுகிய பாதை, அவசரகால வெளியேற்றங்கள் இல்லாதது போன்றவை இதில் அடங்கும்.தீ மற்றும் மின்சாரத்தால் விபத்து ஏற்படுவதைத் தடுக்க முக்கிய உபகரணங்கள் இல்லாதது; பணியாளர்கள் பற்றாக்குறை, மாவட்ட நிர்வாகம், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறை போன்ற துறைகளின் ஒருங்கிணைப்பு இல்லாததும் உயிரிழப்புக்கு காரணமாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு

இது போன்ற மத வழிபாடு சார்ந்த கூட்டங்கள், ஆன்மிக சொற்பொழிவு கூட்டங்களின் போது, அதிகமான அளவில் மக்கள் வந்தால், அவர்களை கட்டுப்படுத்துவதற்கு போதுமான போலீசார் உள்ளனரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.கடந்த 2022ல் இந்திய போலீஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, 'நாட்டில் உள்ள ஒரு லட்சம் பேருக்கு, 153 போலீசாரே பாதுகாப்பு பணியில் உள்ளனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. எது எப்படி இருப்பினும், மதம் மற்றும் அரசியல் நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும், இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் உடைய ஜனநாயக நாட்டில் கூட்டம் அதிகளவில் கூடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஆகவே, அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, இதுபோன்ற பேரிடர்கள் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திஉள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா சிறிய ரக உளவு விமானங்கள் உள்ளிட்டவற்றை கூட்டத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். இது போன்ற கூட்டங்கள் நடத்த வகுக்கப்பட்ட நெறிமுறைகள் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு, கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். கடந்த 2019ல் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், கும்பமேளாவில் நவீன தொழில்நுட்ப வசதிகள் பயன்படுத்தப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற கூட்டம், எந்த இழப்புமின்றி நடத்தப்பட்டது. அடுத்த ஆண்டும், இதைவிட சிறப்பாக நடத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, விலை மதிப்பற்ற மனித உயிர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாவதைத் தடுக்க, உரிய தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sriraju
ஜூலை 07, 2024 14:34

என்னதான் விதிமுறைகளை கடுமையாக்கினாலும், அனைவரும் அதனை பின்பற்றினால் தான் நன்மை கிடைக்கும்.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ