வருமான வரித்துறையினர் கொடுத்து வரும் குடைச்சலால், தேர்தல் செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் திண்டாடும் காங்கிரஸ் கட்சி, வேட்பாளர்கள் தேர்வில் அணுகுமுறையை மாற்றிக் கொண்டுள்ளது. சொந்த பாக்கெட்டில் இருந்து பணத்தை வாரி இறைத்து தேர்தலை எதிர்கொள்ளும் சக்தி உடைய வசதியான வேட்பாளர்களை களம் இறக்குவது என்ற முடிவுக்கு வந்துள்ளது. எதிர்ப்பு
இந்த அடிப்படையில் தான், சத்தீஸ்கரின் மிக முக்கியமான லோக்சபா தொகுதியாக கருதப்படும் பிலாஸ்பூர், காங்., - எம்.எல்.ஏ., தேவேந்திர யாதவுக்கு வழங்கப்பட்டு உள்ளது. துர்க் மாவட்டத்தில் உள்ள பிலாய் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வான தேவேந்திர யாதவுக்கு லோக்சபா சீட் ஒதுக்கப்பட்டதற்கு, காங்., கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிலாஸ்பூர் காங்., அலுவலகம் முன், கட்சி தொண்டர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளார்.கட்சிக்குள்ளும் சரி, மக்கள் மத்தியிலும் சரி, தேவேந்திர யாதவுக்கு செல்வாக்கு இல்லை. அம்மாநிலத்தின் நிலக்கரி மற்றும் போக்குவரத்து ஊழல் வழக்கில், அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்துக்குள் அவர் கொண்டு வரப்பட்ட பின் தான், அவரது பெயரே வெளியில் பரவலாக தெரிய ஆரம்பித்ததாக கட்சியினர் கூறுகின்றனர்.காங்.,கை சேர்ந்த முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு நெருக்கமானவர் என்பதால், அவரது சிபாரிசின்படி தேவேந்திர யாதவ் சீட் பெற்றதாக கூறப்படுகிறது.மேலும், சத்தீஸ்கரின் பல்வேறு லோக்சபா தொகுதிகளில் காங்.,கின் வேட்பாளர்கள் தேர்வு ஆச்சரியமூட்டுவதாக உள்ளது. கடந்த 2014 லோக்சபா தேர்தலில் துர்க் தொகுதியில் போட்டியிட்டு வென்ற தாம்ரத்வாஜ் சாஹு, இம்முறை மஹாசமுந்த் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.துர்க் தொகுதியில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய தேவேந்திர யாதவுக்கு பிலாஸ்பூர் தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. தன் சொந்த மாவட்டமான துர்கை புறக்கணித்துவிட்டு ராஜ்நந்தகாவ்ன் தொகுதியை பூபேஷ் பாகேல் தேர்வு செய்துள்ளார். அக்கறை காட்டவில்லை
இப்படி வேட்பாளர்கள் இஷ்டத்துக்கு தொகுதி மாறி நிறுத்தப்படுவதால், சொந்த கட்சியினரே ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர்.பாகேல் முதல்வராக இருந்தபோது மாநிலத்தை தனியார் நிறுவனத்தை போல நடத்தியதாகவும், ராஜ்நந்தகாவ்ன் குறித்து அவர் துளியும் அக்கறை காட்டவில்லை என்றும் உள்ளூர் காங்., தலைவர்கள் சுரேந்திர தாவ் உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.பழங்குடியினர் கணிசமாக உள்ள ராஜ்நதகாவ்ன் தொகுதியில் கோண்ட்வானா காந்தந்த்ரா கட்சி வேட்பாளரை நிறுத்தியுள்ளது. மொத்தமுள்ள 11 லோக்சபா தொகுதிகளில், 10ல் இக்கட்சியினர் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளனர்.இவர்கள் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றாலும், ஓட்டுகளை கணிசமாக பிரிப்பது உறுதி என கூறப்படுகிறது.சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் லோக்சபா தொகுதியின் கீழ் 25 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்., வெற்றி பெற்ற 35 தொகுதிகளில், 14 தொகுதிகள் பிலாஸ்பூர், கோர்பா மற்றும் ஜான்ஜ்கிர் லோக்சபா தொகுதிகளின் கீழ் வருகின்றன. சட்டசபை தேர்தலில் இந்த பிராந்தியத்தில் காங்., ஓட்டுகளை அள்ளி இருந்தாலும், லோக்சபா தேர்தலில் இந்த மூன்று தொகுதிகளிலுமே தேறுவது கடினம் என கூறப்படுகிறது.- நமது சிறப்பு நிருபர் -