அமைச்சரவையில் பங்கு கேட்க 100 தொகுதிகளை பலப்படுத்த வேண்டும்; : காங் ., மேலிட பொறுப்பாளர்
'தமிழகத்தில், 100 சட்டசபை தொகுதிகளை அடையாளம் கண்டு, அத்தொகுதிகளை பலப்படுத்தி காட்டினால், துணை முதல்வர் பதவி, அமைச்சரவையில் பங்கு கேட்கலாம்' என, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேசியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=53bwpo8v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக காங்கிரஸ் செயற்குழு, மாவட்டத் தலைவர்கள், இளைஞர், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், கிரிஷ் சோடங்கர் பேசியது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
காங்கிரஸ் அறக்கட்டளை நிர்வாகம் கலைக்கப்பட்டு விட்டது. புதிய உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவர். ஓட்டு திருட்டு குறித்த தேர்தல் கமிஷன் முறைகேடுகளை, மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும், பேரணி, பொதுக் கூட்டங்கள் நடத்த வேண்டும். தேசிய அளவில், ஐந்து கோடி பேரிடம் கையெழுத்து வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு கோடி கையெழுத்து பெற வேண்டும். குறைந்தபட்சம் 100 தொகுதிகளில், காங்கிரஸ் பலமான கட்சியாக மாறும்வரை, கடுமையாக உழைக்க வேண்டும். அப்படியொரு நிலை ஏற்பட்டால், ஆந்திராவில் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தது போல், தமிழகத்திலும் காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு ஆகியவற்றை, டில்லி மேலிடம் ஒப்புதலுடன் கேட்கலாம். நேற்று கட்சி துவக்கியவர்கள், முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் போது, நுாற்றாண்டு கண்ட காங்கிரசுக்கு, ஆட்சி அதிகாரம் கிடைக்க, அனைவரும் உழைக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு சீர்கெடும் போது, கூட்டணி கட்சியும் சுட்டிக்காட்ட வேண்டும். தனிமனிதனுக்கு பாதிப்பு வரும்போது, அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். கூட்டணி கட்சி என்பதால், வாய்மூடி மவுனியாக இருக்க வேண்டியதில்லை. கூட்டணி கட்சியின் ஆட்சி என்பதால், கைகளில் விலங்கு போட்டு கொண்டு இருக்க முடியாது. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும், சரியான பாதையில் செல்ல வேண்டும். ஆளுங்கட்சி தவறான பாதையில் சென்றால் எதிர்க்கட்சியும், கூட்டணி கட்சியும் சுட்டிக்காட்டினால் தான், ஆளுங்கட்சியால் அதை சரிசெய்ய முடியும். இவ்வாறு, கிரிஷ் சோடங்கர் பேசினார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அழைத்ததும் சென்றால் காங்கிரஸ் நல்ல கட்சி
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, சமீப நாட்களாக காங்கிரஸை வசைபாடி வருகிறார். அவர், எங்களை கூட்டணிக்கு அழைத்தார். நாங்கள் மறுத்ததும், தேய்ந்து போன கட்சி என்கிறார். அவர் அழைத்ததும் சென்றிருந்தால், நல்ல கட்சி என்று சொல்லியிருப்பார். இன்றுவரை, காங்., சுயமரியாதையோடு தி.மு.க., கூட்டணியில் உள்ளது. பா.ஜ.,வுக்கு தி.மு.க., - காங்.,கில் இருந்து முக்கிய தலைவர்கள் வருவர் என, மத்திய இணை அமைச்சர் முருகன் பகல் கனவு காண்கிறார். அவரது கனவு பலிக்காது. - செல்வப்பெருந்தகை தலைவர், தமிழக காங்., - நமது நிருபர் -