வாசகர்கள் கருத்துகள் ( 1 )
40 பேர்ல துரைமுருகன் பேரும் வருமா?
தி.மு.க., வேட்பாளர் பட்டியலில், இளைஞர் அணியை சேர்ந்த, 40 பேரை இடம் பெற வைக்க, துணை முதல்வர் உதயநிதி விருப்பம் தெரிவித்துள்ளதால், 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் கலக்கம் அடைந்துள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெறும், சட்டசபை தேர்தலில், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், வேட்பாளர்களை தேர்வு செய்ய, தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இளைஞர்கள், இளம் பெண்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் புதிய வாக்காளர்களை, விஜய் கட்சி வளைக்க வாய்ப்பு உள்ளது. இதனால், தி.மு.க., கூட்டணிக்கு இளைஞர்களின் ஓட்டு சதவீதம் குறையும். விஜய்க்கு செல்லும் இளைஞர்கள் ஓட்டுகளை, தி.மு.க.,வுக்கு மடை மாற்ற உதயநிதி விரும்புகிறார். இதற்காக, 16 முதல் 35 வயதுள்ள இளைஞர்களை, இல்லந்தோறும் சென்று, தி.மு.க., இளைஞர் அணியில் உறுப்பினராக இணைத்திடும், 'இல்லந்தோறும் இளைஞரணி' திட்டத்தை ஏற்படுத்தினார். தமிழகத்தில், 234 தொகுதிகளிலும், இளைஞரணி சார்பில் பயிற்சி பாசறை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தியாவிலேயே முதல் கட்சியாக, பூத் கமிட்டி பாகத்திற்கு மூன்று நிர்வாகிகள், தி.மு.க., இளைஞரணியில் உருவாக்கப்பட்டது. இதன் வாயிலாக, மொத்தம், 5 லட்சம் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேர்தலுக்கு முன், நான்கு மண்டலங்களில், இளைஞரணி மாநாடு நடத்தப்பட உள்ளன. மண்டல மாநாடுகளை திறம்பட நடத்த ஒத்துழைப்பு கொடுக்கும் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் தகுதியான நிர்வாகிகள் என, வருவாய் மாவட்டத்திற்கு ஒருவர் மற்றும் மாநில நிர்வாகிகள் என, 40 பேரை வேட்பாளராக தேர்வு செய்ய உதயநிதி திட்டமிட்டுள்ளார். இத்தகவல், 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்களுக்கு தெரிய வந்துள்ளதால், தங்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என, கலக்கம் அடைந்துள்ளளனர். இது குறித்து, தி.மு.க., இளைஞரணி வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2021 தேர்தலில், உதயநிதிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு, இளைஞரணி சார்பில், மாவட்ட வாரியாக தீர்மானம் நிறைவேற்றிய பின், அவருக்கும், சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபாகர் ராஜாவுக்கும், போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. கடந்த லோக்சபா தேர்தலில், இளைஞர் அணி நிர்வாகிகள் நான்கு பேரை களம் இறக்க, உதயநிதி விரும்பினார். ஆனால், ஒருவருக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. வரும் சட்டசபை தேர்தலில், 40 தொகுதிகளை வாங்கி, தன் ஆதரவாளர்களை எம்.எல்.ஏ.,க்களாக்க வேண்டும்; வயது முதிர்வாக இருக்கும் மாவட்டச்செயலர்களுக்கு மாநில அளவில் பதவி வழங்கி விட்டு, இளைஞரணி எம்.எல்.ஏ.க்களுக்கு மாவட்டச் செயலர் பதவி வழங்க வேண்டும் என்பது உதயநிதி திட்டம். எதிர்காலத்தில், கட்சி தன் தலைமையில் இயங்குவதற்கு, இவர்கள் பக்கபலமாக இருப்பர் எனவும் விஜய் கட்சிக்கு போட்டியாக, இளைஞர்களை முன்னிலைப்படுத்தும் வகையில், வேட்பாளர் பட்டியல் இருக்க வேண்டும் எனவும், கட்சி தலைமையிடம் உதயநிதி தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன - நமது நிருபர் -.
40 பேர்ல துரைமுருகன் பேரும் வருமா?