உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பாக்.,கை கதறவிட்ட வான் பாதுகாப்பு கவசம் ஆகாஷ்தீர்: உள்நாட்டில் தயாரான புத்திசாலி போர்வீரன்

பாக்.,கை கதறவிட்ட வான் பாதுகாப்பு கவசம் ஆகாஷ்தீர்: உள்நாட்டில் தயாரான புத்திசாலி போர்வீரன்

புதுடில்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு கவசமான, 'ஆகாஷ்தீர்' பாகிஸ்தானின் தாக்குதலை சாதுர்யமாக முறியடித்து, நம் படையினருக்கு பெருமை சேர்த்தது. 'இது, உலகம் இதுவரை கண்டிராத புத்திசாலித்தனமான அசுரன்' என, நம் ராணுவ அமைச்சகம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆப்பரேஷன் சிந்துார்' வாயிலாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாக்., ராணுவம் களமிறங்கியதோடு, நம் நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு எல்லையோர ராணுவ தளங்கள், மக்கள் குடியிருக்கும் பகுதிகளை குறி வைத்து 'ட்ரோன்'கள், ஏவுகணைகளை வீசியது. இதையடுத்து, மே 9 நள்ளிரவு முதல் மே 10 அதிகாலை வரை, நம் பாதுகாப்பு படையினர், 'ஆகாஷ்தீர்' வான் பாதுகாப்பு கவசத்தை களமிறக்கி, பாக்.,கை திக்குமுக்காடச் செய்தனர்.

தாக்குதல்

பாக்., ஏவுகணைகளை விண்ணிலேயே சிதறடித்ததோடு பாக்.,கின் விமானப்படை தளங்கள், ராணுவ தளங்கள், ரேடார் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு மையங்கள் என, 13 இலக்குகளை நம் படையினர், சல்லி சல்லியாக நொறுக்கினர். பாக்., தரப்பின், சீன இறக்குமதி பாதுகாப்பு கவசங்களான 'ஹெச்க்யூ 9', 'ஹெச்க்யூ 16' ஆகியவற்றால் இந்திய தாக்குதல்களை தடுக்க முடியவில்லை. நம் ராணுவத்தின், 'ஆகாஷ்தீர்' தீரத்துடன் ஆதிக்கம் செலுத்தியதால், மே 10 நண்பகலிலேயே போர் நிறுத்தத்துக்கு பாக்., பதறியபடி ஓடி வந்தது. இந்த நிலையில், 'ஆகாஷ்தீர்' குறித்து நம் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:இருண்ட வானில்கூட, விழிப்புடன் இருக்கும் போர்வீரன் என, 'ஆகாஷ்தீர்' பாதுகாப்பு அமைப்பை கூறலாம். போர் விமானம் போல் கர்ஜனையோ, ஏவுகணை போல் மின்னவோ செய்யாது. ஆனால், கண்ணுக்கு தெரியாத தானியங்கி வான் கவசமான இது, எதிரியின் ஒவ்வொரு ட்ரோன், ஏவுகணை, போர் விமானத்தை கவனித்து, மிகச் சரியாக கணக்கிட்டு, துல்லியமாக தாக்கியது. உலகில் இதுவரை பயன்பாட்டில் உள்ள வான் பாதுகாப்பு மற்றும் தடுப்பு அமைப்புகளை விட, வேகமாக கண்காணித்து, முடிவு எடுத்து, தாக்குவதில் சிறந்தது 'ஆகாஷ்தீர்' என்பது நிரூபணமாகி விட்டது. 'ஆகாஷ்தீர்' மிருகத்தனமான சக்தி உடையது மட்டுமல்ல; புத்திசாலித்தனமான போர்வீரன்.

கண்காணிப்பு

பல்வேறு வழிகளில் தரவுகளை சேகரித்து, அவற்றை போரில் சம்பந்தப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு அறை, ரேடார்கள், எதிர் தாக்குதலுக்கான பாதுகாப்பு படை என, அனைத்து தரப்புக்கும், அந்த நேரத்தின் சேட்டிலைட் படத்துடன் அவ்வப்போது வழங்கி, அந்த நேரத்துக்கேற்ற முடிவுகளை எடுக்கும். 'சி4ஐஎஸ்ஆர்' எனப்படும் கட்டளை, கட்டுப்பாடு, தகவல் தொடர்பு, கம்ப்யூட்டர், நுண்ணறிவு, கண்காணிப்பு, உளவு ஆகிய கட்டமைப்புகளுடன் ஒருங்கிணைந்த பரந்து விரிந்த வான் பாதுகாப்பு அமைப்பு, இது. தரையில் நிரந்தரமாக இருக்கும் ரேடார் மற்றும் மனித முடிவுகளை நம்பி இருக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் போல் இது கிடையாது. நகரும் விதத்திலான வாகன அடிப்படையில் இருப்பதால், பதற்றமான சூழலிலும் எளிதாக கையாள முடிகிறது.போர்க்களத்தில், குறைந்த அளவிலான வான்வெளியை கூட கண்காணித்து, தானாகவே வான் பாதுகாப்பை கட்டுப்படுத்தும். முப்படைகளுடனான இதன் ஒருங்கிணைப்பு, வேறு எவற்றுடனும் ஒப்பிட முடியாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

1 நவீன கால போர்க்களத்தில் தவிர்க்க முடியாத சக்தி, 'ஆகாஷ்தீர்'. நிகழ்நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளை கணித்து, அதற்கேற்ற முடிவுகளை எடுப்பது, எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்வது, அதன் அடிப்படையில் தாக்குவது என அசத்தும் ஓர் அமைப்பை இதுவரை பார்த்ததில்லை என பாக்., ராணுவ நிபுணர்களே மிரட்சி அடைந்துள்ளனர் 2 ஒருங்கிணைந்த வான் கட்டுப்பாடு மற்றும் கட்டளை அமைப்புடன் கூடிய போர் உத்தியில், 'இது ஒரு பிரளயம் அல்லது பெரிய அதிர்வு' என சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் வாயிலாக, ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு மற்றும் தடுத்து தாக்குதல் நடத்தும் திறன் உடைய உயர் பாதுகாப்பு நாடுகளில் இந்தியாவும் இணைந்திருக்கிறது 3 அணு ஆயுதத்தை கொண்டு பாக்., மிரட்ட முடியாது; தேவைப்பட்டால் எல்லைக்குள் சென்று இந்தியா பதிலடி கொடுக்கும் என, நம் பிரதமர் மோடி கூறியதன் பின்னணியில், இந்திய ராணுவத்தின் புதிய அத்தியாயமான 'ஆகாஷ்தீர்' இருக்கிறது 4ஆத்மநிர்பார் பாரத்' எனப்படும் 'சுயசார்பு இந்தியா'வின் வலிமையை காட்டும் விதத்தில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரான, 'ஆகாஷ்தீர்' உருவானதில், பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் நிறுவனத்துக்கு முக்கிய பங்கு உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

naranam
மே 18, 2025 15:58

இந்திய விஞ்ஞானிகள் பொறியியல் வல்லுநர்கள் ராணுவம் மற்றும் மோடிஜி ஆகியவர்களின் மிகப்பெரிய இந்த வெற்றி பாகிஸ்தான் மட்டுமல்லாது சீனா மற்றும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கும் மிகப் பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் வயித்தெரிச்சலையும் கொடுத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. வாழ்க பாரதம். வளர்க பாரதம்.


இளந்திரையன் வேலந்தாவளம்
மே 18, 2025 08:26

extraordinary


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 18, 2025 06:48

கெடைக்குற கேப்புல எல்லாம் உலகத்துக்கே ஆப்பு வெக்கிறீங்களே மோடிஜி.... வாழ்க பாரதம்.....!!!


Kalidass Kuppusamy
மே 18, 2025 04:53

wow. Great.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை