உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கெத்து பேச்சால் பதவியை பறிகொடுத்த அழகிரி

கெத்து பேச்சால் பதவியை பறிகொடுத்த அழகிரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்அஜோய் குமாரைபுறக்கணித்தது; டில்லி மேலிடத்தில், 'என்னை பதவியிலிருந்து எடுத்துக்கோங்க' என, அழகிரி 'கெத்தாக' பேசியது போன்றவற்றால் அவரது பதவி பறிபோயுள்ளது. அது மட்டுமல்லாமல்,கட்சியின் டில்லி மேலிட தலைவர்கள் மற்றும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆசியுடன், செல்வப்பெருந்தகைக்கு தலைவர் பதவி கிடைத்ததாகவும் அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.தமிழக காங்., தலைவராக அழகிரி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், அவரை அப்பொறுப்பில் இருந்து நீக்கி, புதியவர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும்கட்சித் தலைமைக்கு தொடர் நெருக்கடி கொடுத்து வந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jldn44ec&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கிடையில், தி.மு.க., தரப்பில் லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு குழு, காங்.,குடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், காங்., சார்பில் அழகிரியும் பங்கேற்றார். இதனால், லோக்சபா தேர்தலுக்கு முன், தன்னை தலைவர் பதவியில் இருந்து மாற்ற வாய்ப்பில்லை என்ற அசாத்திய நம்பிக்கையில் இருந்தார்.

நெருக்கம்

இதற்கிடையில், கட்சியின் தமிழக மேலிட பொறுப்பாளராக இருந்த தினேஷ்குமார் மாற்றப்பட்டு, அஜோய்குமார் நியமிக்கப்பட்டார். அவரது நியமனம், அழகிரிக்கு அதிருப்தியை உண்டாக்கியது. சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு அஜோய்குமார் முதல் முறையாக வந்தபோது, அழகிரி அவருக்கு முக்கியத்துவம் தரவில்லை. ஆனால், செல்வப்பெருந்தகை அவரை வரவேற்று நெருக்கம் காட்டினார்.சென்னையில் இம்மாதம் 13ல், 'பூத் கமிட்டி' நிர்வாகிகள் மாநாடு நடத்தவும், அதில், காங்கிரஸ் தலைவர் கார்கே பங்கேற்கவும் திட்டமிடப்பட்டது. இதற்கான நிதி திரட்டவும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தப்பட்டது.அந்த ஆலோசனைகூட்டத்தில் பங்கேற்ற அழகிரி, ஜோதிமணி எம்.பி., ஆகியோரிடையே காரசார வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து, கூட்டத்தை அஜோய்குமார் பாதியிலேயே நிறுத்தியதோடு, அழகிரி மீது கடும் கோபம் அடைந்தார்.'தமிழக காங்., மேலிட பொறுப்பாளராக நான் நீடிக்க வேண்டும் என்றால், அழகிரியை தலைவர் பதவியிலிருந்து மாற்றுங்கள்' என, டில்லி தலைமையிடம் முறையிட்டார்.இதற்கிடையில், அழகிரிக்கு தெரியாமல், 39 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியலை, அஜோய் குமார் ஆலோசனையின்படி டில்லி மேலிடம் வெளியிட்டது. இதனால், கட்சித் தலைமை மீதும் அழகிரி அதிருப்தி அடைந்தார்.'தலைவர் பதவியில் நான் நீடிக்க வேண்டுமா; வேண்டாமா என்பதை, நீங்களே முடிவு செய்து அறிவியுங்கள். பதவியில் நீடிக்க விருப்பப்படவில்லை' என, கட்சியின் பொதுச்செயலர் வேணுகோபாலிடம் அழகிரி சீறியுள்ளார்.கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்கும் மாநாடு பணிகளை,அழகிரி மேற்கொள்ளாமல், தமிழக எம்.பி.,க்களிடம் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்ததால், இது தொடர்பாக விசாரிக்க, அழகிரியை டில்லிக்கு வருமாறு வேணுகோபால் அழைத்துள்ளார். அழகிரி செல்லவில்லை; சொந்த ஊரிலேயே இருந்து விட்டார்.

ஒத்துழைப்பு

கோபம் அடைந்த வேணுகோபால், கார்கேவிடம் விபரத்தைச் சொல்ல, அவர் சோனியாவிடம் விபரத்தை எடுத்துச் சென்றார். இதன் பின்னரே, அழகிரியை தமிழக தலைவர் பதவியிலிருந்து மாற்றியுள்ளனர்.'பாரத் ஜோடோ யாத்திரை' என்ற பெயரில், இந்திய ஒற்றுமைக்கான நடைபயணம் மேற்கொண்டு வரும் காங்., முன்னாள் தலைவர் ராகுல், தன் முதல்கட்ட யாத்திரையை கன்னியாகுமரியில் துவங்கினார்.அப்போது, ஆளுங்கட்சியின் ஒத்துழைப்புக்காக, தி.மு.க., தரப்பில் பேசப்பட்டது. அதற்காக முதல்வர் ஸ்டாலின் வரை பேசி, ஆளுங்கட்சியின் முழு ஒத்துழைப்பை பெற்றுத் தந்தவர் செல்வப்பெருந்தகை.அதனால், அழகிரியை மாற்றிவிட்டு, அவர் இடத்தில் செல்வப்பெருந்தகையை நியமிக்கலாம் என கார்கே முடிவெடுத்ததும், தன் முழு சம்மதத்தை ராகுல் தெரிவித்து விட்டார்.கடந்த சில மாதங்களுக்கு முன் கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் நடந்தது. அதில் போட்டியிட்ட கார்கே மகன் பிரியங்க் கார்கேவுக்காக தேர்தல் பணியாற்றினார் செல்வப்பெருந்தகை. இதனால், பிரியங்க் கார்கே மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது.முதல்வர் ஸ்டாலினும் செல்வப்பெருந்தகைக்கு ஆதரவாக இருக்க, அவரையே காங்கிரஸ் தமிழகத் தலைவராக நியமித்து விட்டனர் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

கூட்டணி வெற்றிக்கு வியூகங்கள் வகுக்கப்படும்

கட்சியை துாக்கி நிறுத்தியவர்கள், கட்சிக்காக உழைத்தவர்கள் என, அனைவரையும்அரவணைத்து செல்வேன். அவர்களைஎல்லாம் கலந்தாலோசித்து, தொண்டர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து, அவர்களின் கனவுகளை நாங்கள் எல்லாம் சேர்ந்துநனவாக்குவோம்.கடந்த 50 ஆண்டுகளாக, தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி இல்லை என்றாலும், கட்சி உயிரோட்டமாகவும், உயிர்ப்புடனும் இருக்கிறது. அனுபவம் உள்ள தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஒத்துழைப்புடன் கட்சியை வலிமையாககட்டமைப்போம். லோக்சபா தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், கூட்டணி கட்சிகள் வெற்றிக்கு வியூகங்கள் வகுப்போம். -செல்வப்பெருந்தகை, தமிழக காங்., தலைவர்

கோஷ்டி தலைவர்கள் குமுறல்!

கடந்த சில மாதங்களுக்கு முன் வரை, தமிழக காங்., தலைவர் பதவியிலிருந்து அழகிரியை மாற்றிவிட்டு, புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என, கோஷ்டி தலைவர்கள், டில்லியில் முகாமிட்டனர். '40 ஆண்டுகளாக, தலித் சமுதாயத்திற்கு தலைவர் பதவி தரவில்லை' என்ற கோரிக்கையை, முன்னாள் எம்.பி.,விஸ்வநாதன், டில்லி மேலிடத்திற்கு எடுத்து சென்றார்; ஏமாற்றமே மிஞ்சியது.அவரை தொடர்ந்து, மாநிலத் தலைவர் பதவியை எதிர்பார்த்து, தனித் தனி கோஷ்டியாகச் செயல்படும் டாக்டர் செல்லக்குமார், மாணிக் தாகூர், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, மயூரா ஜெயகுமார், விஷ்ணு பிரசாத், திருநாவுக்கரசர் போன்றவர்களும், டில்லி மேலிடத்தில் தனித் தனியாக காய் நகர்த்தினர்; பயனில்லை. கட்சியின் மேலிடத் தலைவர் அஜோய் குமார், பொதுச்செயலர் வேணுகோபால், தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் என, அனைத்து தரப்பினரும் செல்வப்பெருந்தகையை, தமிழக காங்., தலைவர் பதவியில் நியமிக்க ஒப்புதல் அளித்ததால், மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், பதவி கிடைக்காதவர்கள் குமுறுகின்றனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ