ஆந்திர துணை முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாருமான பவன் கல்யாண், 54, சாதாரண அரசியல்வாதியாக இல்லாமல், அறநெறி காவலராகவும், மக்களின் பாதுகாவலராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார். பல்வேறு விவகாரங்களில் அரசுக்கு எதிராக அவர் குரல் எழுப்புவது, முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. ஆந்திராவில், 2024ல் நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற நிலையில், ஜனசேனா தலைவரும், தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டாரான பவன் கல்யாண், துணை முதல்வரானார். தனிப்பெரும்பான்மையுடன் வென்றாலும், கூட்டணி தர்மத்தின்படி, பவன் கல்யாணை துணை முதல்வர் ஆக்கினார் சந்திரபாபு நாயுடு. துணை முதல்வரானதும் பரபரப்பாக பணியாற்றிய பவன் கல்யாண், சில மாதங்கள் ஆந்திர அரசியலில் காணாமல் போயிருந்தார். கலகக்குரல் இந்நிலையில், தலைப்புச் செய்திகளில் அவர் மீண்டும் இடம்பெற துவங்கி உள்ளார். ஆனால், பல்வேறு விவகாரங்களில் அரசுக்கு எதிராக அவர் குரல் கொடுப்பது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, அரசுக்கும் தர்ம சங்கடத்தை உண்டாக்குகிறது. சமீபகாலமாக, பொது மக்களுக்கு எதிரான போலீசாரின் வரம்பு மீறிய செயல்பாடுகளை கண்டித்து, துணை முதல்வர் பவன் கல்யாண் குரல் கொடுத்து வருகிறார். மேலும், மக்களின் குறைகளை கையாள்வதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும், அமைப்பிலும், நிர்வாகத்திலும் பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என்றும் மாநில அரசை அவர் வலியுறுத்தி வருகிறார். இது தவிர, ஊழல், அரசு திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் தவறான நிர்வாகம் ஆகியவற்றுக்கு எதிராக பேசும் துணை முதல்வர் பவன் கல்யாண், சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக வாதிடுகிறார். இது, கூட்டணி கட்சிகளை அடிக்கடி தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்குகிறது. திரையுலக சூப்பர் ஸ்டாராக இருப்பதாலும், ஊடக கவனம் அதிகளவில் கிடைப்பதாலும் பவன் கல்யாண் சுட்டிக்காட்டும் பிரச்னைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்படுகிறது. சமீபத்தில், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஜெயசூர்யா, 'ரம்மி, போக்கர்' கிளப்புகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும், அரசியல் தலைவர்களின் பெயரைப் பயன்படுத்தி, கட்டப் பஞ்சாயத்து செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதை அறிந்த துணை முதல்வர் பவன் கல்யாண், பீமாவரம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஜெயசூர்யா குறித்து விரிவாக அறிக்கை அளிக்கும்படி, மாவட்ட எஸ்.பி., மற்றும் மாநில டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டார். அவரது இந்த நடவடிக்கை பொது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றாலும், ஆளும் கூட்டணி அரசை தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கியது. அதிருப்தி இதனால் வேறு வழியின்றி, மாநில உள்துறை அமைச்சர் அனிதா, டி.ஜி.பி., ஆகியோருடன் அவசர ஆலோசனை நடத்திய முதல்வர் சந்திரபாபு நாயுடு, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார். சில மாதங்களுக்கு முன், தன் சொந்த சட்டசபை தொகுதியான பிதாபுரத்தில், சட்டம்- - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்ட போது, உள்துறை அமைச்சர் அனிதாவுக்கு துணை முதல்வர் பவன் கல்யாண் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்தார். 'உள்துறை அமைச்சர் அனிதா செயல்படத் தவறினால், உள்துறையை நானே எடுத்துக் கொள்ள நேரிடும்' என, அவர் குறிப்பிட்டார். பவன் கல்யாணின் இத்தகைய நடத்தை தெலுங்கு தேசம் நிர்வாகிகளை அதிர்ச்சியடைய செய்தது. அரசியலமைப்பின் கீழ், துணை முதல்வர் பதவி என்பது மற்ற அமைச்சர்களுக்கு இணையானது தான். அந்த பதவிக்கு கூடுதல் அதிகாரங்கள் எதுவும் இல்லை. அரசியல் ஆதாயத்துக்காக துணை முதல்வர் பதவி பயன்படுகிறது. அப்படி இருக்கையில், முதல்வர் போல பவன் கல்யாண் செயல்படுவது கூட்டணி கட்சிகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது. அரசு திட்டங்களை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்தும், நிர்வாக தவறுகளை தவிர்ப்பது குறித்தும் பவன் கல்யாண் பேசுவது பொது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறுகிறது. தனிப்பட்ட நடத்தை, மத அனுசரிப்புகளை இணைத்து, இளைஞர்களிடையே தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளும் அவர், மரபு மற்றும் கலாசாரத்தின் காவலராகவும் தன்னை காட்டிக் கொள்கிறார். கட்சி மற்றும் ஆட்சியில், மகனும், அமைச்சருமான நாரா லோகேஷை முன்னிலைப்படுத்த முதல்வர் சந்திரபாபு நாயுடு நடவடிக்கை எடுத்து வருகிறார். எதிர்காலத்தில் நாரா லோகேஷை எதிர்த்து போட்டியிடும் நோக்கில், ஆந்திர அரசியல் களத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை துணை முதல்வர் பவன் கல்யாண் உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. - நமது சிறப்பு நிருபர் -: