உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அரசின் மீதோ, காவல் துறை மீதோ, சமூக விரோதிகளுக்கு பயமே இல்லை! அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்

அரசின் மீதோ, காவல் துறை மீதோ, சமூக விரோதிகளுக்கு பயமே இல்லை! அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.அவர்கள் அறிக்கை:

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி:

டில்லியில் நிர்பயா சம்பவம் நடந்து, 12 ஆண்டுகள் கழித்து, அதே போன்று ஒருசம்பவம் தமிழகத்தில் நடப்பது, சட்டம் ஒழுங்கை முதல்வர் ஸ்டாலின் பின்நோக்கி தள்ளி இருப்பதையே காட்டுகிறது. பெண்களுக்கு, கல்வி நிலையங்கள், பணியிடங்களில் கூட பாதுகாப்பு இல்லாத அளவிற்கு, சட்டம் ஒழுங்கை கெடுத்துள்ள தி.மு.க., அரசுக்கு கண்டனம். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதுடன், அவர்களுக்கு கடும் தண்டனை கிடைப்பதை, உறுதி செய்ய வேண்டும்.தமிழகம் முழுதும் பெண்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது. தினமும் படுகொலை சம்பவங்கள், போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு, பொது மக்கள், அரசு அதிகாரிகள், போலீசார், பெண்கள், குழந்தைகள் என, யாருக்கும் பாதுகாப்பு இல்லாத இருண்ட காலத்தில் இருப்பது போன்ற சூழலில், தமிழகம் இருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.குறிப்பாக, குற்றவாளிகள் தி.மு.க.,வினர் என்றால், அவர்கள் மீதான நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது. தலைநகரின் மையப் பகுதியில், இன்ஜினியரிங் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, போலீசாரின் மீதோ, எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.காவல் துறைக்கு பொறுப்பான முதல்வர், மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, பொது மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:

உலகப் புகழ் பெற்ற அண்ணாப் பல்கலையில், இப்படியொரு கொடுமை நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதற்கு, இது கொடூரமான எடுத்துக்காட்டு. தி.மு.க., ஆட்சியில், எங்கும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை. சரியான நேரத்தில் தக்க தண்டனையை, தி.மு.க., அரசுக்கு மக்கள் அளிப்பர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன்:

இச்சம்பவம் கடும் கண்டனத்துக்கு உரியது. இது அண்ணா பல்கலை மாணவியர் மத்தியில் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வது கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தில் பெண்கள்,குழந்தைகள் மீது, குறிப்பாக கல்விக்கூடங்களில், மாணவியர் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள்அதிகரித்து வருவது, கவலை அளிக்கிறது. கல்வி நிலையங்கள், விடுதிகள் அனைத்திலும் மாணவியருக்கு, பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்.

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா:

சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது என்றால், சமூக விரோதிகளுக்கு அரசின் மீதோ, காவல் துறை மீதோ எந்த பயமும் இல்லை என்பது தெரிகிறது.இந்த குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தமிழக அரசும், காவல் துறையும் நீதி வழங்க வேண்டும்.

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்:

இச்சம்பவம், அண்ணா பல்கலை மாணவியரின் பாதுகாப்பையும், கேள்விக்குறியாக்கி உள்ளது. அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை, மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மாணவியை பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில், மாணவியர் பாதுகாப்பான சூழலில், கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:

அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது போன்ற சம்பவங்களில், உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து, தண்டனை வழங்காததால், இது போன்ற சம்பவம், செய்தியாக இருந்து கடந்து விடுகிறது. கடும் தண்டனை இருக்கும் என உளவியல் அச்சம் இருந் தால்தான், இது போன்ற குற்றங்கள் தொடராமல் இருக்கும். நடக்கும் குற்ற சம்பவங்களில், 90 சதவீதம் போதையில்தான் நடக்கிறது. ஒழுக்கத்தை கற்பிக்கின்ற வளாகத்திலேயே நடக்கிறது என்றால், நாடு நாடாக இல்லை; அறம் சார்ந்த மக்கள் கூட்டமாக நாம் இல்லை என்று பொருள். இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sivakumar Thappali Krishnamoorthy
டிச 28, 2024 11:07

வீணாய்ப்போன போலீஸ் அடிமைகள் , சம்பளத்துக்கு வேலை பாக்குறாங்க , எந்த ரௌடி இப்போ பயப்பபடுறான்.


Nandakumar Naidu.
டிச 26, 2024 18:05

இனியும் இந்த வீணாய் போன விளங்காத விடியல் ஆட்சி, ஆட்சியில் இருக்க வேண்டுமா? திமுக கட்சி எம்எல்ஏக்கள் அமைச்சர்களின் வீட்டுப் பெண்களுக்கு இவ்வாறு நேர்ந்திருந்தால் இப்படித்தான் பேசுவார்களா? இப்படித்தான் எஃப் ஐ ர் காப்பியை வெளியேற்றுவார்களா? அந்தப் பெண்ணின் சாபம் இவர்களை சும்மா விடாது.


Rajarajan
டிச 26, 2024 17:19

தலை எப்படியோ, வாலும் அப்படி. எப்படி ?? தலைவன் எவ்வழி, தொண்டன் அவ்வழி.


பேசும் தமிழன்
டிச 26, 2024 13:01

அனைத்துக்கும் மூல காரணம் டாஸ்மாக் சாராயம் தான்.... இவர்கள் எதிர்கட்சி யாக இருந்த போது டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கூறிய இவர்கள்.... ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக் கடைகளை மூடாமல்.... நாங்கள் கடைகளை மூடுவது குறித்து ஒன்றும் சொல்ல வில்லை என்று கூறுகிறார்கள்..... அப்போ முன்பு இவர்கள் நடத்திய நாடகம் எல்லாம்..... தமிழக மக்கள் அனைவரும் சிந்தியுங்கள் ???


Muralidharan S
டிச 26, 2024 11:33

குடிதான் எல்லா குற்றங்களுக்கும் மூலக்காரணம். "குடி குடியை கெடுக்கும்" என்று போட்டால் மட்டும் போதுமா.. சமூகத்தை கெடுக்கும் குடி வியாபாரத்தை நடத்துவது யார் ?. அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்... குடிகாரர்கள், சமூக விரோதிகள், குற்றவாளிகள் அல்லது குற்ற பின்னணி கொண்டவர்கள் இல்லாத ஒரு கட்சியை தயவு செய்து காட்டுங்கள் பாப்போம்... தனி மனித ஒழுக்கம் இல்லாத நிலையில், இனி இந்த நிலை மாறுவது மிக கடினம்.


Muralidharan S
டிச 26, 2024 11:20

எல்லா குற்றங்களும் மாமூல் வாழ்க்கை மூலம் நடக்கும்போது பயம் எப்படி இருக்கும்... "டாஸ்மாக் " குற்றங்களின் முதல் எதிரி.. நூறு சாதிவிகித குற்றங்களின் பிறப்பிடம் அரசாங்கமே நடத்தும் டாஸ்மாக்தான். போதை பொருட்கள் மிகவும் சர்வ சாதாரணமாக புழங்க யார் காரணம்? நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் அரசியல் அழுத்தத்தால் கண்டும் காணாமலும் இருக்கிறார்கள். காவல்துறை மற்றும் அரசாங்கம், "பொதுமக்களின் நலனுக்கு மட்டும் நண்பனாக" இருந்தால்...முக்கால் வாசி குற்றங்கள் குறையும்.


ராமகிருஷ்ணன்
டிச 26, 2024 10:58

திமுக ஆட்சியில் இருக்கும் போது எல்லா தரப்பு குற்றவாளிகளுக்கும் தனி தைரியம், துணிவு வந்து விடும். பல ஆண்டுகளாக இதை கவனித்து உள்ளேன். அரசின் ஆதரவு அவர்களுக்கு உண்டு. பணம் மட்டும் கொடுத்து விட்டு எத்தகைய குற்றச்செயல்களையும் செய்து தப்பி விடலாம் என்ற நம்பிக்கை திமுக ஆட்சியில் உண்டு. பல தரப்பட்ட குற்றவாளிகள் திமுகவின்ர்தான் என்று செய்திகளை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்


அப்பாவி
டிச 26, 2024 08:29

குற்றவாளிகளை பூப்போல புடிக்கணும்.அவிங்களுக்கு தண்டனையும் லேசா இருக்கணும். நியாய சம்ஹிதை அதைத்தானே சொல்லுது. கஞ்சா அடிச்சுட்டு போதையில் போலுசையே தாக்குறானுக. அவனுங்க கை காலை முறிச்சா அடுத்த தடவை அப்புடி செய்வானா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை