உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ராகுல் - விஜயை சந்திக்க வைக்க முயற்சி

ராகுல் - விஜயை சந்திக்க வைக்க முயற்சி

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க, அடுத்த மாதம் வர உள்ள லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, த.வெ.க., தலைவர் விஜய் சந்திக்க, இரு தரப்பிலும் முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் செப்., 27-ம் தேதி நடந்த த.வெ.க., பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தோரை, முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இடம் தேர்வு

த.வெ.க., தலைவர் விஜய், இறந்தவர்கள் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார். ஆனால், அவர்களின் குடும்பத்தினரை, காயமடைந்தோரை, த.வெ.க., நிர்வாகிகள் நேரில் சந்திக்கவோ, ஆறுதல் கூறவோ இல்லை. த.வெ.க., கொள்கை பரப்பு செயலர் அருண்ராஜ் ஏற்பாட்டில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம், 'வீடியோ கால்' வாயிலாக விஜய் ஆறுதல் கூறினார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, திருமண மண்டபம் அல்லது ஹோட்டலில் விஜய் சந்திக்க அனுமதி கோரி, த.வெ.க., சார்பில், டி.ஜி.பி., அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விஜய் மீண்டும் கரூர் வரும்போது, அதிக ரசிகர்கள் வர வாய்ப்புள்ளதால், ஹோட்டல், திருமண மண்டபங்களை வழங்க, அதன் உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். கரூரைச் சேர்ந்த பா.ஜ.,வினர் மட்டும் ஓரிரு இடங்களை வழங்க ஒப்புக் கொண்டனர். ஆனால், அந்த இடங்கள் போதுமானதாக இருக்காது எனக் கூறி த.வெ.க., தரப்பினர் தவிர்த்து விட்டனர். இந்நிலையில், இடம் தேர்வு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கரூரில் விஜய் நிகழ்ச்சிக்கான இடம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.

காங்., ஏற்பாடு

கூடவே, போலீசார் அனுமதியும் கிடைக்கவில்லை. எனவே, விஜய் இந்த மாதம் இறுதியில் கரூர் செல்ல இருந்த பயணம் தள்ளி போக வாய்ப்பு உள்ளது. இதற்கிடையில், வெளிநாடு சென்றிருந்த ராகுல் டில்லி திரும்பி விட்டார். அவர் நவ., 5ம் தேதி கரூர் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற, விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் கட்சிகளில், முதல் கட்சியாக காங்கிரஸ் கட்சி சார்பில், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியுதவியை, அக்கட்சியின் பொதுச்செயலர் வேணுகோபால் வழங்கினார். இந்நிலையில், கட்சியின் முன்னாள் தலைவர் ராகுலை கரூருக்கு அழைத்து வந்து, பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் சொல்ல வைக்கும் நிகழ்ச்சிக்கு காங்., ஏற்பாடு செய்து வருகிறது. கரூருக்கு ராகுல் வரும் தேதி அன்று, விஜய் வருவதற்கும், அவர்கள் இரு வரும் சந்தித்து பேசவும், விஜய் தரப்பில் ஏற்பாடு நடந்து வருகிறது. திருச்சி விமான நிலையம் அல்லது ஈரோடு சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவ ல் வெளியாகி உள்ளது.

இது குறித்து த.வெ.க., வட்டாரங்கள் கூறிய தாவது:

கரூர் சம்பவத்தை வைத்து, த.வெ.க.,வை பா.ஜ., கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சி நடக்கிறது. அதை முறியடிக்க, ராகுல், விஜயை சந்தித்து பேச வைக்க, ஏற்பாடு நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு, தமிழகம், கேரளா, புதுச்சேரி சட்டசபை தேர்தல், அதை தொடர்ந்து, கர்நாடக சட்டசபை தேர்தல் என வரிசையாக, தேர்தல் நடக்கவுள்ளது.

கூட்டணி ஆட்சி

விஜய் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பதன் வாயிலாக, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி, கேரளா, புதுச்சேரியில் விஜய் ரசிகர்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்துவிடும். தென் மாநிலங்களில், காங்கிரஸ் வெற்றியை தொடர்ந்து , வட மாநிலங்களில், காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த முடியும் என, ராகுல் தரப்பிலும் கணக்கு போடுகின்றனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !