சென்னை:தமிழக அரசு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டாமல், விதி மீறும் வாகனங்களை கண்டறிந்து, அபராதம் விதிப்பதில் மட்டும் கவனம் செலுத்துவதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில், ஆண்டுதோறும் ஜன., மாதத்தில், சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.  சாலை விதிகள்
வாகன ஓட்டிகள் ஹெல்ட்மெட் அணிய வேண்டும், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது, அதிவேகமாக செல்லக் கூடாது, சீட் பெல்ட் அணிய வேண்டும் உள்ளிட்ட சாலை விதிகளை, மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கும். குறிப்பாக, பிரதான சாலைகள், பள்ளி, கல்லுாரிகள், போக்குவரத்து அலுவலகங்களில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.இந்த ஆண்டு இந்த மாதம் முழுதும், அனைத்து மாநிலங்களிலும், சாலை பாதுகாப்பு வாரம் கடைப் பிடிக்க, மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், தமிழகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்னும் பெரிய அளவில் நடக்கவில்லை. அதேநேரம், விதி மீறும் வாகன ஓட்டிகளிடம், அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை கன ஜோராக நடந்து வருகிறது. இது, பொதுமக்களிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து, தமிழ்நாடு சுதந்திர வாடகை வாகன சங்க மாநில பொதுச்செயலர் ஜூட் மேத்யூ கூறியதாவது: நாட்டில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலங்களில், தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. சாலை பாதுகாப்பு விதிகளை அனைவரும் அறிந்து கொள்வதுடன், அதை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. ஆனால், போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து துறையினர், சாலை பாதுகாப்பு வாரத்தை பெரிதாக கண்டு கொள்வதில்லை. இது, சாலை விபத்துகள் குறைப்பு நடவடிக்கையில் தமிழகம் பின்தங்கும் நிலையை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.வாகன விபத்து வழக்கறிஞர் சுரேஷ் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பெரிய அளவில் நடக்கவில்லை. புதிதாக வாகனங்களை ஓட்டுவோருக்கு, சாலை விதிகள் குறித்து கூறுவதில்லை.  விதி மீறல்கள்
போக்குவரத்து துறையிலேயே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தாதது, ஏமாற்றத்தை அளித்து வருகிறது. விதியை எடுத்துரைக்காமல், விதி மீறல்களை காரணம் காட்டி, அபராத வசூலில் மட்டும் கவனம் செலுத்துவதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து, போக்குவரத்து ஆணையரக அதிகாரி கள் கூறுகையில், 'இந்த மாதம் ஆரம்பத்தில், சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினோம். 'பொங்கல் பண்டிகை விடுமுறை வந்ததால், கடந்த வாரம் நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. வரும் வாரம் முழுதும் சாலை பாதுகாப்பு குறித்து, பல்வேறு நிகழ்வுகளை நடத்த உள்ளோம்' என்றனர்.