கோவை; தமிழக துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சிகளில், கூட்டத்தை பயன்படுத்தி, பிக் பாக்கெட் ஆசாமிகள் கைவரிசை காட்டியதால், பணத்தை இழந்த தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்தனர்.தமிழக துணை முதல்வர் உதயநிதி, நேற்று முன்தினம் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்த அவருக்கு, விமான நிலையத்தில் இருந்து தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர். நிர்வாகிகள் பலரும் பொன்னாடை மற்றும் புத்தகங்கள் வழங்கவும், மனு கொடுக்கவும் முயற்சித்தனர்.கட்சியினரோடு, பிக் பாக்கெட் ஆசாமிகளும் நின்றிருக்கின்றனர். அதை, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கண்காணிக்கத் தவறி விட்டனர். துணை முதல்வரை வரவேற்கவும், அவருக்கு கை குலுக்கவும், பொன்னாடை அணிவிக்கவும் கட்சியினர் முயற்சித்தபோது, அவர்களது பாக்கெட்டில் இருந்த பணத்தை, பிக் பாக்கெட் ஆசாமிகள் திருடி விட்டனர். இவ்வகையில், விமான நிலையம் வழித்தடத்தில் மட்டும், 57 ஆயிரம் ரூபாயை கட்சியினர் இழந்திருக்கின்றனர்.பணத்தை திருடியதாக சந்தேகப்பட்ட இருவரை பிடித்து, தர்ம அடி கொடுத்து, பீளமேடு புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களது மொபைல் போனும் போலீசாரிடம் வழங்கப்பட்டது. போலீசார் விசாரித்ததில், ஒருவர் மட்டுமே பிக்பாக்கெட் ஆசாமி என்பதும், இன்னொருவர் வேடிக்கை பார்க்க வந்தவர் என்பதும் தெரியவந்தது. பிக்பாக்கெட் ஆசாமியிடம் விசாரித்தபோது, திருடிய பணத்தை உடனுக்குடன் கை மாற்றி, வேறொருவரிடம் ஒப்படைத்து விட்டதாக கூறியிருக்கிறார்.இதேபோல், வ.உ.சி., மைதானத்தில் எம்.பி., அலுவலகம் திறப்பு விழாவுக்கு உதயநிதி வந்திருந்த சமயத்தில், மனு கொடுக்க கட்சியினர் திரண்டு நின்றிருந்தனர். அக்கூட்டத்திலும் பிக் பாக்கெட் ஆசாமிகள் புகுந்து கைவரிசை காட்டியிருக்கின்றனர். ஒருவரிடம் மட்டும், 17 ஆயிரத்து, 500 ரூபாய் திருடப்பட்டிருக்கிறது. இது, தி.மு.க., நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துணை முதல்வர் வருகை பாதுகாப்பில், மாநகர போலீசார் அலட்சியமாக செயல்பட்டு இருப்பதை இவ்விரு சம்பவங்களும் காட்டுகிறது.போலீசார் கூறுகையில், 'வெளிமாவட்டத்தை சேர்ந்த பிக் பாக்கெட் ஆசாமிகள் ஊடுருவியிருக்கின்றனர். அவர்களது 'ரூட் லிங்க்' விசாரித்து வருகிறோம். அக்கும்பல், அரசியல் கட்சி தலைவர்கள் வரும் பகுதிக்குச் சென்று, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பிக் பாக்கெட் அடிப்பதை தொழிலாக வைத்திருக்கின்றனர். திருடும் தொகையை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் அனைவரையும் விரைவில் பிடிப்போம்' என்றனர்.