உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / போக்குவரத்து அமைச்சருக்கு ஷாக் கொடுத்த பஸ் ஊழியர்கள்

போக்குவரத்து அமைச்சருக்கு ஷாக் கொடுத்த பஸ் ஊழியர்கள்

கரூர்: அனுமதி இல்லாத ஹோட்டலில் பஸ்சை நிறுத்தியது குறித்து கேள்வி எழுப்பிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம், 'யாரு சார் நீங்க?' என, பஸ் ஊழியர்கள் எதிர் கேள்வி எழுப்பி, அதிர்ச்சி அளித்தனர்.கோவை, கொடீசியா வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், 100 புதிய பஸ்களின் சேவையை கொடியசைத்து துவங்கி வைத்தார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு காரில் அரியலுாருக்கு சென்றார்.கரூர் - -மாயனுார் இடையே ஒரு ஹோட்டலில் காரை நிறுத்தி டீ குடித்தார். அதே உணவகத்தில் ஒரு அரசு பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. டிரைவர், கண்டக்டர் அங்கு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர். இதை கவனித்த அமைச்சர் சிவசங்கர், இருவரிடமும் பேச்சு கொடுத்தார். பின், 'உணவு, காபி, டீ சாப்பிடுவதற்கு உங்களுக்கென குறிப்பிட்ட இடம் அரசு ஒதுக்கி உள்ளதே. அங்கு நிறுத்தாமல் ஏன் இங்கு நிறுத்துகிறீர்கள்? இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு சென்றால் யார் பதில் சொல்வது?' என, கேட்டுள்ளார். அமைச்சர் பேண்ட், சர்ட் அணிந்து பயணியை போல் இருந்ததால், இருவருக்கும் அடையாளம் தெரியவில்லை. சற்றே புலம்பியபடி, 'ஏன் சார் இதெல்லாம் கேட்குறீங்க? நீங்க யாரு சார்?' என, கேட்டுள்ளனர். அதற்கு, அமைச்சர் சிவசங்கர் சிரித்தபடி, 'நான் யார் என்றே தெரியவில்லையா?' என, கேட்டுள்ளார்.'தெரியலையே' என மீண்டும் கூறியுள்ளனர். 'நான்தான்பா உங்க துறைக்கே அமைச்சர்' என்றதும், இருவரும் செய்வதறியாமல் விழித்து, 'சாரி சார்... நாங்க யாருன்னு தெரியாம பேசிட்டோம்' என, மன்னிப்பு கேட்டனர்.அமைச்சர் சிவசங்கர், 'இனி இதுபோல் செய்யாமல், உங்களுக்கான இடத்தில் மட்டும் பஸ்சை நிறுத்தி உணவருந்துங்கள்' என்று கூறி, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த ருசிகர உரையாடலை, அமைச்சர் சிவசங்கர் தன் முகநுால் பக்கத்தில் தெரிவித்த பிறகே, அனைவருக்கும் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Raa
ஜூலை 07, 2025 15:17

துறை ஊழியர்களை சந்தில்தால் தானே அவர்களுக்கு தெரியும். எப்போதும் கட்சிபணி மட்டுமே கதி என்று இருந்தால், இப்படித்தான்


N Sasikumar Yadhav
ஜூலை 07, 2025 22:03

கட்சிப்பணி என்றால் விஞ்ஞானரீதியாக ஆட்டய போடுவதை பற்றியா சொல்கிறீர்


Ravi Kumar
ஜூலை 07, 2025 12:33

யப்பா நம்ம நடத்துனரும் ஓட்டுனரும் பொது அறிவு சூப்பர் ....துறை அமைச்சர் யார் என்று ......போக்கு வரத்து துறை சட்டங்கள் தெரிந்தால் சரி ......


ponssasi
ஜூலை 07, 2025 12:13

அரசு பேருந்துகள் நிற்கும் உணவகத்தில் அமைச்சர் சிவசங்கர் தேநீர் அருந்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். குறிப்பாக திண்டிவனம் to திமலை வழித்தடத்தில் உள்ள tea அருந்தவேண்டும். அதுசரி மக்கள் இங்குதான் உணவருந்தவேண்டும் என உத்தரவிட்டுவிட்டு அங்கு அமைச்சரே செல்லாதது வருத்தமாக உள்ளது.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 07, 2025 11:26

ஊழியர்கள் அவர்களது பணியை செய்துள்ளனர், இவர்தான் அமைச்சர் என்று தெரிந்து கொண்டு அவர்களுக்கு என்னாங்க போகிறது, அதே நேரத்தில் அமைச்சரான என்னையே தெரியவில்லையா என்று சித்தராமையா ஸ்டலில் அடிக்க கையை ஓங்காமல் கையை கட்டிக்கொண்டு நிற்கும் சிவசங்கர் அவர்களும் பாராட்டுகிறேன், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அறிவுரை மட்டுமே கொடுத்து சென்றதற்கு , அந்த மனிதாபிமானம் அருமை