உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  டிஜிட்டல் தளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரம்!: பொய் தகவல்களை தடுக்க புதிய சட்டம் இயற்ற முடிவு

 டிஜிட்டல் தளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரம்!: பொய் தகவல்களை தடுக்க புதிய சட்டம் இயற்ற முடிவு

புதுடில்லி:டிஜிட்டல் தளங்களில் ஆபாசமான, ஆட்சேபகரமான மற்றும் பொய்யான தகவல்கள் வெளியிடப்படுவதை தடுப்பது குறித்து தற்போதுள்ள சட்டங்களை ஆய்வு செய்வதாகவும், புதிய சட்டம் தேவையா என்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும், மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.வழக்கமான பத்திரிகைகள் மற்றும் 'டிவி' சேனல் போன்ற ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகள், கருத்துகளை கண்காணிக்கவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் சட்டங்கள் உள்ளன. ஆனால், புதிய ஊடகம் என்று கூறப்படும், இணையதளத்தின் வாயிலாக இயங்கும் ஓ.டி.டி., தளங்கள், யு டியூப் போன்ற டிஜிட்டல் தளங்களை கண்காணிக்கவும், ஒழுங்குபடுத்தவும் தனியாக எந்த ஒரு சட்ட நடைமுறையும் இல்லை.

டிஜிட்டல் தளம்

கருத்து சுதந்திரம் என்ற பெயரில், பலரும் இந்த டிஜிட்டல் தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுகின்றனர். இதைத் தவிர ஆபாசமான மற்றும் ஆட்சேபகரமான தகவல்களும், எவ்வித தணிக்கையும் இல்லாமல் வெளியாகின்றன.இத்துடன், பொய் தகவல்களும் இந்த டிஜிட்டல் தளங்களில் கொட்டிக் கிடக்கின்றன.இது போன்ற பொய் தகவல்கள் மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளால் சமூகத்தில் அமைதி சீர்குலைகிறது என்ற புகார்களும் வந்துள்ளன. இந்நிலையில், ஓ.டி.டி., தளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என, மத்திய அரசின் செய்தி, ஒலிபரப்புத் துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.கருத்து சுதந்திரம் என்ற பெயரில், எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் டிஜிட்டல் தளங்களில் வெளியாகும் தகவல்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக, பார்லிமென்டின் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நிலைக்குழு சமீபத்தில் ஆலோசனை நடத்தியது.பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே தலைமையிலான இந்த நிலைக் குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து எம்.பி.,க்களும், இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.நிலைக்குழுவில் கேள்வி களுக்கு பதிலளித்து, மத்திய அரசின் செய்தி, ஒலிபரப்புத் துறை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:டிஜிட்டல் தளங்களை கட்டுப்படுத்தும் வகையில் உரிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். பல உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றம், எம்.பி.,க்கள், தேசிய பெண்கள் கமிஷன் உள்ளிட்ட அமைப்புகள் என, பல தரப்பினர் இதை வலியுறுத்தியுள்ளனர்.

ஆலோசனை

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், இதுபோன்ற டிஜிட்டல் தளங்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன.அதே நேரத்தில் ஆட்சேபகரமான, ஆபாசமான தகவல்கள் வெளியிடப்படுவதை தடுப்பதற்கு தற்போதுள்ள சட்டங்களே போதுமானதா என்பது குறித்தும், கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய சட்டத்தை உருவாக்க வேண்டுமா என்பது குறித்தும், ஆலோசனை நடத்தி வருகிறோம்.இது தொடர்பான விரிவான அறிக்கை, விரைவில் தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் அதிருப்தி

இணைய ஊடக பிரபலமான ரன்வீர் அல்லாபாடியா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அருவருக்கத்தக்க வகையில் அவர் பேசினார். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் அவருக்கு கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக அவர் மீதும், அந்த நிகழ்ச்சியில் அவருடன் பங்கேற்றோர் மீதும், பல நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. போலீஸ் ஸ்டேஷன்களிலும் புகார்கள் குவிந்து வருகின்றன. இது தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம், கைது செய்யப்படுவதில் இருந்து அவருக்கு தற்காலிக பாதுகாப்பு வழங்கியுள்ளது. அதே நேரத்தில், அவருடைய பேச்சுக்கு கடுமையான கண்டனத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அழுக்கான மனநிலையே இதுபோன்று பேசுவதற்கு துாண்டியுள்ளதாக, உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.'இந்த விவகாரம் தொடர்பாக, தேவைப்பட்டால் புதிய சட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் டிஜிட்டல் தளங்களை கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகளை நாங்கள் அறிவிப்போம்' என, உச்ச நீதிமன்றம் மிகவும் கடுமையுடன் கூறியிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை