உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  50 சதவீத மக்கள் அதிருப்தியால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு விரக்தி

 50 சதவீத மக்கள் அதிருப்தியால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு விரக்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - பா.ஜ., - ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. மக்களிடம் நல்ல பெயர் எடுக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் மாநாட்டில், அரசு மீது பாதிக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் என, அதிர்ச்சி தகவலை முதல்வர் சந்திரபாபு நாயுடுவே வெளியிட்டார். ''அரசு நிர்வாகத்தின் மீது 51 சதவீத மக்கள் மட்டுமே திருப்தி அடைந்துள்ளனர். மொத்தமுள்ள, 21 எம்.பி.,க்களில் வெறும் ஐந்து பேரின் செயல்பாடுகளுக்கு மட்டுமே மக்களின் ஆதரவு இருக்கிறது. அதுவும் 50 சதவீதம் தான்,'' என, மாவட்ட ஆட்சியர்களிடம் இந்த தகவலை சந்திரபாபு நாயுடு பகிர்ந்து கொண்டார்.

மெத்தனம்

''நில பிரச்னைகள், வடிகால் திட்டங்கள், ஊரக குடிநீர் வினியோகம், அடிப்படை பொது வசதிகள், வேலைவாய்ப்பின்மை என, பல்வேறு விவகாரங்களில் அரசு மெத்தனமாக இருப்பதால், இந்த அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. ''வருமானத்தை பெருக்குவதாக உறுதியளித்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதற்கு மாறாக கடனை அதிகரித்து விட்டார். இதனால், மீளா கடனில் தற்போது ஆந்திர அரசு சிக்கி தவிக்கிறது. நலத்திட்டங்கள் மற்றும் அன்றாட செலவுகளை குறைக்க வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது,'' என்கிறார் அரசியல் விமர்சகர் நாகேஸ்வர். முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், அவரது மகன் நாரா லோகேஷும், அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்து, மாநிலத்தில் புதிய தொழில்கள் துவங்குவதற்கான வாய்ப்புகளை அமைத்து கொடுத்தாலும், சாமானிய மக்கள் வியப்பு அடையவில்லை. தனிப்பட்ட முறையில் அரசிடம் இருந்து ஏதோ ஒரு நன்மை கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இது தான் தற்போதைய கள நிலவரமாக இருக்கிறது என, தெலுங்கு தேச மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடன் சுமை அதிகரித்ததால், பொருளாதார ரீதியாக செலவுகளை சமாளிக்க முடியாமல் ஆந்திர அரசு தற்போது திண்டாடி வருகிறது.

விமர்சனம்

அரசு ஊழியர்களுக்கான மாத சம்பளம், ஓய்வூதியம் வழங்குவதற்கு கூட பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது. இதனால், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்க சந்திரபாபு நாயுடு அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது அரசின் வருவாய் மற்றும் செலவினங்களுக்கான இடைவெளி 34 சதவீதமாக இருக்கிறது. இது நிதியாண்டின் இறுதிக்குள் 140 சதவீதமாக அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுடன் நெருக்கமாக இருப்பதால், சந்திரபாபு நாயுடு அரசு வரம்பு மீறி கடன்களை வாங்கி குவிக்கிறது என்ற விமர்சனங்களும் தற்போது எழுந்து இருக்கின்றன. புதிய தலைநகர் அமராவதிக்காக, 10,000 கோடி ரூபாய் கடனை மத்திய அரசு ஏற்பாடு செய்து இருக்கிறது. மத்திய அரசு கடன்களை வழங்குவதற்கு பதிலாக, மானியங்கள் வழங்க முன்வந்தால் மட்டுமே, சந்திரபாபு நாயுடு அரசு இந்த சிக்கலில் இருந்து தப்பிக்கும். இல்லையெனில், இதற்கு முன் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி தலையிலான, ஒய்.எஸ்.ஆர். காங்., அரசு போல கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

கனோஜ் ஆங்ரே
டிச 25, 2025 13:30

அனுபவித்துதானே ஆகணும்...


NALAM VIRUMBI
டிச 25, 2025 12:57

மத்தியில் சங்கி ஆட்சிக்கு வந்த பின்னர் தானே தேசம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. உலகமே நம்மை வியந்து பார்க்கும் நிலைக்கு உயர்ந்துள்ளோம். ஆந்திராவில் நடப்பது கூட்டணி ஆட்சி என்பதால் பா ஜ க வின் கட்டுப்பாட்டில் தெலுங்கு தேசம் இருக்குமா என்ன? சரியாக திட்டமிட்டு செயல் புரிவதில் தான் வளர்ச்சி இருக்கிறது.


தமிழன் மணி
டிச 25, 2025 02:18

கேடுகெட்ட சங்கிகள் கொள்ளைக்கார ஊழல் களவாணிகள் கூட்டத்துக்கு காவடி தூக்கினால் இதுதான் நிலைமை இங்கேயும் இரண்டில் ஒரு திருட்டு முன்னேற்றக் கழகம் இதே மாதிரி கடனை வானுயர ஏற்றி வைத்து உள்ளது


sankar
டிச 25, 2025 14:03

இப்போது ஆள்வோர் என்று தெளிவாய் சொல்ல பயமா


சமீபத்திய செய்தி