4 ஆண்டில் 50 சதவீதம் மின் கட்டணம் உயர்வு; சி.ஐ.டி.யு., சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
கடலுார் : '' தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், 50 சதவீதம் மின் கட்டணம் உயர்ந்துள்ளது,'' என, சி.ஐ. டி.யு., மாநி லத் தலைவர் சவுந்தரராஜன் கூறினார். கடலுாரில் நடந்து வரும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 18வது மாநில மாநாட்டில் பங்கேற்ற அவர் கூறியதாவது: மின்சாரம், போக்கு வரத்து துறையை பொறுத்தவரை லாபம், நஷ்டம் பார்க்கக்கூடாது. அரசின் பொறுப்பில் இருக்க வேண்டும். இதில் தனியார் மயமாக்கல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால், தற்போது கொஞ்சம், கொஞ்சமாக தனியார் மயமாக்கல் நுழைக்கப் படுகிறது. தமிழகத்தின் மின் உற்பத்தி திறனில், 52 சதவீதம் தனியார் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்கனவே போடப்பட்ட மின் உற்பத்தி திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றியிருந்தால் மின் உற்பத்தியை அதிகரித்து இருக்க முடியும். அனுமதிக்கப்பட்ட பணியிடத்தில், 50 சதவீதம், அதாவது 64 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. அதை ஈடுகட்டுவதற்கு சட்ட பாதுகாப்பின்றி ஒப்பந்த, பகுதி நேர ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதே அரசுக்கு நல்லது. மின் கட்டணம் 2022ம் ஆண்டு முதல், 2025 வரை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. மக்கள் மற்றும் பயனீட்டாளர்களை கேட்டு கட் டணத்தை உயர்த்த வேண்டும் என விதி இருந்தாலும் அரசு தன்னிச்சையாக உயர்த்துகிறது. மின்சார சட்ட திருத்த மசோதா, ஸ்மார்ட் மீட்டர், உதய் போன்ற திட்டங்களை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். ஆனால் அவருக்குப்பின் வந்த அ.தி.மு.க., ஏற்றுக்கொண்டது. ஒட்டு மொத்த அதிகாரிகள், தொழிலாளர்கள் வாங்கும் சம்பளமும், மின் வாரியம் கடனுக்கு கட்டும் வட்டியும் ஒன்றாக உள்ளது. கட்டண உயர்வு மக்களுக்கு உகந்ததல்ல. 20 மாதங்களுக்கு மேலாக தொழிலாளர் ஒப்பந்தம் பேசி முடிக்கப்படவில்லை. கடந்த ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது, 28 மாத நிலுவைத் தொகையை அரசு தராமல் ஏமாற்றியது. தேர்தல் வாக்குறுதிகளை மறந்துவிட்டது. தொழிலாளர் தொடர்பான வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தொழிலாளர்களுக்கு எதிராக தனியார்மயமாக்கல் தான் நடக்கிறது. இதற்கு அரசு நியாயமான பதில் அளிக்காவிட்டால் போக்குவரத்து, மின் ஊழியர்கள் போராட்டம் நடத்துவர். இவ்வாறு அவர் கூறினார்.