நிர்வாக செலவுகளுக்கு அரசு கைவிரிப்பு: வரி வசூலில் நகர உள்ளாட்சிகள் தீவிரம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர்: தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் விதிக்கப்படும் சொத்து வரியில், ஆண்டுக்கு, 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, முதல் அரையாண்டு தொகையை செப்., 30ம் தேதிக்குள், இரண்டாவது அரையாண்டு தொகையை, மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.கடந்த ஆண்டுகளில், இரண்டு அரையாண்டிற்கான வரியை, ஆண்டு கடைசியில் சேர்த்து ஒரே தவணையாக மக்கள் செலுத்துவர். இதனால் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மட்டுமே சொத்து வரி வசூல் தீவிரமாக இருக்கும்.தற்போது, அந்தந்த அரையாண்டிற்கான சொத்துவரியை, நிர்ணயித்த காலத்திற்குள் செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தவறும்பட்சத்தில், ஒவ்வொரு மாதமும் 1 சதவீதம் அபராத வட்டி வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.இதன்படி, செப்., 30ம் தேதிக்குள் முதல் அரையாண்டிற்கான சொத்து வரி செலுத்தாவிட்டால், அக்டோபரில் இருந்து ஒவ்வொரு மாதமும் அபராத வட்டி 1 சதவீதம் செலுத்த வேண்டும்.இதனால், ஏப்ரல் மாதம் முதல் அரையாண்டு துவக்கத்தில் இருந்தே மக்கள் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், 6 சதவீதம் உயர்த்தப்பட்ட சொத்து வரிக்கு பதிலாக, பழைய கணக்கீட்டின் படி, ஏப்ரலில் சொத்துவரி வசூலிக்கப்பட்டது.அந்த மாதம் சொத்துவரி செலுத்தியவர்களுக்கு, தற்போது உயர்த்தப்பட்ட சொத்து வரியை கணக்கீடு செய்து, உபரி தொகையை செலுத்தக் கோரி, உள்ளாட்சிகள் நோட்டீஸ் வினியோகம் செய்து வருகின்றன.உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:நகர்ப்புற உள்ளாட்சிகளில் நிர்வாக செலவுகள் அதிகரித்து வருவதால், வரி வருவாயை பெருக்க அரசு உத்தரவிட்டுள்ளது. முந்தைய காலங்களில் மார்ச், ஏப்., மாதங்களில் தான், பெரும்பாலான மக்கள் வரி செலுத்துவர். அதுவும், 60 முதல், 70 சதவீதம் வரையே வசூலாகும். தற்போது அந்தந்த அரையாண்டுக்குரிய வரியை, அந்தந்த காலத்துக்குள் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நிர்வாக செலவினங்களுக்கு அரசு நிதி ஒதுக்காத நிலையில், வரி வசூலில் வருவாயை ஈட்டி, செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையாக தான், வரி வசூலை தீவிரப்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.