கோவை; நகை காணாமல் போன வழக்கு விசாரணைக்காக, அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின், காவலாளி அஜீத்குமார் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். அவர் உடலில், 18 இடங்களில் காயங்கள் இருந்தது, பிரேதப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது.எப்.ஐ.ஆர்., கூட பதிவு செய்யாமல், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை அடித்துக் கொன்ற போலீசின் நடவடிக்கை குறித்து, கோவை மக்கள் கொந்தளிக்கின்றனர்.'தடுக்கப்பட வேண்டும்'
தவறுதலாக நடக்க வாய்ப்பில்லை. விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் எதுவும் செய்யாமல் சாக வேண்டிய அவசியமில்லையே. அரசுக்கு தெரியும், இதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது. ஒவ்வொரு முறையும் இதேபோல் நடக்கிறது. தடுக்கப்பட வேண்டும்.-ஜி.கேசவன், இருகூர்.'அதற்காக இப்படியா'
முதலில் அவர் நகையை திருடினாரா என்பது தெரிய வேண்டும். அவ்வாறு திருடி இருந்தால், தண்டிக்க சட்டம் உள்ளது. போலீசார் தண்டிக்காமல் உண்மை வெளியில் வராது. ஆனால், அதற்காக இந்தளவுக்கு அடிக்க வேண்டிய அவசியமில்லை. - எஸ்.ஆர்.மயில்சாமி, சரவணம்பட்டி.'மனிதாபிமானம் வேண்டும்'
விசாரிக்கலாம்; ஆனால், சாகும் அளவிற்கு தாக்குவது மனிதநேயமற்றது. இதனால், சமூகத்தில் நடக்கும் அநீதிகளை, தட்டிக்கேட்க யாரும் முன் வரமாட்டார்கள். இதன் காரணமாக குற்றங்கள் அதிகரிக்கவே வாய்ப்பு ஏற்படும். போலீசாருக்கு சற்று மனிதாபிமானம் வேண்டும்.- எம்.யுவராஜ், பெரியநாயக்கன்பாளையம்.
'பாலியல் வழக்குக்கு தேவை'
ஒரு சாதாரண திருட்டுக்கு, ஒருவரை இந்தளவுக்கு தாக்கியதை ஏற்கவே முடியாது. இன்று, பல இடங்களில் பாலியல் பலாத்கார வழக்குகளில், குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர். அவர்கள் மீதுதான், இப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். காவலாளி உயிரிழக்கும் அளவுக்கு தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜே.வெங்கடேஷ், ஆர்.எஸ்.புரம்.'யார் மீது கோபம்'
இவர்களுக்கு யார் மீது கோபம். யாரோ ஒருவர் மீது உள்ள கோபத்தை, அப்பாவி ஒருவர் மீது காட்டியுள்ளனர். தவறு செய்த பலர் இருக்கும் போது, அவர்கள் மீது எல்லாம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒன்றும் தெரியாத நபர் என்றால், அவர்கள் மீது வன்முறை நடக்கிறது.- ஆர்.குணா, காந்திபுரம்.'இது நடக்கவே கூடாது'
உண்மையில் இது அதிர்ச்சி அளிக்கும் சம்பவம். இதுபோல் இனி நடக்கக் கூடாது. அனைவரும் கேள்வி எழுப்ப வேண்டும். கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இதுபோன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எஸ்.சுவாதி, ரத்தினபுரி.'கடும் சட்டங்கள் தேவை'
இதுபோன்ற சம்பவங்களால், நம்மிடம் மனிதம் இருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. நிச்சயமாக இதில் ஈடுபட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இனி இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கவே கூடாது. அதற்கான கடும் சட்டங்கள் வர வேண்டும். - எ.மனோஜ், ரத்தினபுரி.