உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கட்டுமான செலவு ஆண்டுக்கு 11 சதவீதம் உயர்வு: வீடு வாங்குவோர் அதிர்ச்சி

கட்டுமான செலவு ஆண்டுக்கு 11 சதவீதம் உயர்வு: வீடு வாங்குவோர் அதிர்ச்சி

சென்னை: 'சிமென்ட், மணல், உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயர்வு காரணமாக, வீடுகளுக்கான கட்டுமான செலவு, ஆண்டுக்கு, 11 சதவீதம் வரை உயர்ந்து வருகிறது' என, கட்டுமான துறையினர் தெரிவித்தனர். நாடு முழுதும், ரியல் எஸ்டேட் துறையில், கடந்த சில ஆண்டுகளாக நல்ல வளர்ச்சி காணப்படுகிறது. மத்திய அரசின் நடவடிக்கையால், வீட்டு வசதி திட்டங்கள், உள் கட்டமைப்பு திட்டங்கள் பெருகி உள்ளன. குறிப்பாக, வீட்டுக்கடன் வட்டி விகிதங்களிலும் மாற்றங்கள் வராத நிலையில், மக்கள் வீடு வாங்குவதற்கான பணிகளில் ஆர்வத்துடன் இறங்குகின்றனர்.

புதிய திட்டங்கள்

கட்டுமான நிறுவனங்களும், மக்களின் தேவையை உணர்ந்து, புதிய திட்டங்களை செயல்படுத்துகின்றன. பொதுவாக கட்டுமான பொருட்களின் விலை, ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு உயர்வது வழக்கம். இயல்பான நிலையில் இந்த உயர்வால், சந்தையில் பெரிய பிரச்னை எதிரொலிக்காது. ஆனால், நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் மட்டும் சிமென்ட் விலை மிக அதிகமாக உள்ளது. அதேபோல, ஆற்று மணல் விலையும், இயல்புக்கு மாறான வகையில் மிக அதிகமாக உள்ளது.

இது குறித்து கட்டுமான துறையினர் கூறியதாவது:

தமிழகத்தில், 2019ல் ஒரு கன அடி மணலின் விலை, 52 ரூபாயாக இருந்தது, தற்போது, 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல, சிமென்ட், டி.எம்.டி., கம்பிகள் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், 1,000 சதுர அடி வீடு கட்டும் போது, ஒரு சதுர அடிக்கான கட்டுமான செலவு, 2019ல், 2,300 ரூபாயாக இருந்தது. தற்போது, 3,250 ரூபாயாக உயர்ந்துள்ளது. கட்டுமான செலவு என்பதில், கட்டுமான பொருட்களின் விலை, பணியாளர் கூலி மட்டுமல்லாது, போக்குவரத்து, திட்ட அனுமதி பெறுவதற்கான நிர்வாக செலவு போன்றவற்றை உள்ளடக்கியது. இந்த செலவுகள் வெகுவாக உயர்ந்து உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடும் நெருக்கடி

இதுகுறித்து, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'கிரெடாய்' அமைப்பின் தேசிய துணைத் தலைவர் எஸ். ஸ்ரீதரன் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக கட்டுமான பொருட்களின் விலை, அபரிமிதமான முறையில் உயர்ந்து வருகிறது. இதனால், ஒரு திட்டத்தை செயல்படுத்திய பிறகு, அடுத்த திட்டத்தை, அதே விலையில் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமான திட்டங்களை செயல்படுத்துவோருக்கு இந்த விலை உயர்வு, கடும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. விலை உயர்வால் வீடுகளின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. புத்தாண்டுக்கு பிறகாவது கட்டுமான பொருட்களின் விலை ஓரளவுக்கு குறையுமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

aaruthirumalai
டிச 09, 2024 20:38

வீடு வாங்காதவர்கள் அதிர்ச்சியடைய தேவையில்லை.


Barakat Ali
டிச 09, 2024 13:53

இந்நிலை தமிழகத்தில் மட்டுமே .... விஷயம் தெரிந்தவர்களுக்கு காரணமும் தெரியும் ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை