உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வாடகைக்கு வருகிறது கூட்டுறவு டாக்சி: மொபைல் போனில் புக் செய்யலாம்

வாடகைக்கு வருகிறது கூட்டுறவு டாக்சி: மொபைல் போனில் புக் செய்யலாம்

புதுடில்லி: வாடகைக்கு கார் எடுப்பதற்கு தற்போது உள்ள, 'ஊபர், ஓலா' போன்ற மொபைல்போன் செயலிகளுக்கு போட்டியாக வருகிறது, கூட்டுறவு டாக்சி. கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தில், வருவாய் முழுதும் டாக்சி ஓட்டுநர்களுக்கே கிடைக்கும்.வாடகைக்கு கார், ஆட்டோ போன்றவற்றுக்கு முன்பதிவு செய்து செல்லும் வசதியை, ஊபர், ஓலா போன்ற நிறுவனங்கள் வழங்குகின்றன. மொபைல்போன் செயலி வாயிலாக இது செயல்படுத்தப்படுகிறது. இதில் பயண கட்டணத்தில் ஒரு பகுதி, இந்த நிறுவனங்களுக்கு செல்லும்.ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் என, மொபைல்போன் வகைகளுக்கு ஏற்ப கட்டணங்கள் மாற்றி நிர்ணயிக்கப்படுவதாக இந்த நிறுவனங்கள் மீது புகார்கள் உள்ளன. சி.சி.பி.ஏ., எனப்படும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் இது தொடர்பாக விசாரித்து வருகிறது.இந்நிலையில், லோக்சபாவில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளதாவது:கூட்டுறவின் வாயிலாக வளர்ச்சி என்பது பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கமாகும். இது வெறும் கோஷமல்ல. கூட்டுறவு வாயிலாக, மக்களுக்கு நல்ல சேவைகள் கிடைப்பதுடன், அந்த சேவையை கொடுப்பவர்களுக்கு அதிக பலனும் கிடைப்பதே நோக்கமாகும்.இந்த வகையில், 'ஷஹகார் டாக்சி' எனப்படும் கூட்டுறவு டாக்சியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளோம். இதை கூட்டுறவு நிறுவனங்கள் நடத்த உள்ளன. கார், டாக்சி, ஆட்டோ, பைக், ரிக் ஷா போன்றவற்றை பதிவு செய்து, கூட்டுறவு நிறுவனங்கள் இந்த சேவையை அளிக்கலாம். இதில் கட்டணம் முழுமையாக, டிரைவர்களுக்கே கிடைக்கும். நடுவில் எந்தக் கட்டணமும் பிடிக்கப்படாது.கூட்டுறவுத் துறை மூன்று ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சியில் இது சாத்தியமாகியுள்ளது. விரைவில் கூட்டுறவு டாக்சி அறிமுகம் செய்ய உள்ளோம். மொபைல்போன் வாயிலாக இந்த சேவையை பெற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.அரசு டாக்சி - சாதக, பாதகங்கள்சாதகங்கள் ஓலா, ஊபர் போன்றவற்றின் ஓட்டுநர்கள், 20 முதல் 30 சதவீதம் வரை கமிஷனாக இழக்கின்றனர். ஆனால், அரசு டாக்சியில் கமிஷன் இல்லை என்பதால், ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் உயரும் தனியார் டாக்சி சேவையில் உள்ள தொழிலாளர்கள் போல அல்லாமல், அரசு டாக்சியில் பணியாளர்கள் கூட்டுறவு அமைப்பில் செயல்படுவதால் கட்டண நிர்ணயம், பணிச்சூழல் ஆகியவை அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு டாக்சி வருகையால், போட்டி அதிகரித்து, டாக்சி கட்டணம் குறையவும்; சேவை மேம்படவும் வாய்ப்பு  டாக்சி சேவையின் பாகுபாடான கட்டணம் போன்றவற்றை கைவிட தனியார் நிறுவனங்கள் முன்வரலாம் அரசு டாக்சி வருகையால் இத்துறை மேலும் முறைப்படுத்தப்பட வாய்ப்பு. பயணியர் பாதுகாப்பு, காப்பீடு தரம் உயரும் என எதிர்பார்க்கலாம்.பாதகங்கள்அரசு நடத்தும் பல்வேறு தொழில்களில் காணக்கூடிய திறனற்ற நிர்வாகம், அதிகாரிகளின் எதேச்சதிகார செயல்பாடு, மோசமான நடைமுறை ஆகியவை அரசு டாக்சியையும் பதம் பார்க்க வாய்ப்பு தனியார் நிறுவனங்களுக்கு எதிராக டாக்சி டிரைவர்கள் சங்கத்திலிருந்து 2017ல் டில்லியில் துவங்கப்பட்ட 'சேவா கேப்' என்ற டாக்சி சேவையால் நிலைக்க முடியவில்லை. இது போன்ற ஆபத்து உள்ளது டாக்சி வணிகத்துக்கு அரசு நிதி ஒதுக்குவது, வரி செலுத்துவோருக்கு சுமையை ஏற்படுத்தும். தனியார்மயமாக்கல் கட்டாயமாகி வரும் சூழலில், டாக்சி வணிகத்தில் அரசின் பங்கு தேவையா என்ற கேள்வியும் எழுகிறது தனியார் நிறுவனங்கள், அரசு டாக்சி சேவையை நியாயமற்ற போட்டியாக கருத வாய்ப்புள்ளது. அரசின் ஆதரவால், விதிகள், தாராள நிதி ஆகியவை, சமமற்ற வர்த்தக சூழலை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது குறைவான கட்டணத்தை அரசு டாக்சி வழங்கினால், சந்தை பாதிக்கப்பட்டு, தனியார் தளங்களை நம்பியுள்ள ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவர். ஓலா, ஊபர் போன்ற சேவைகளுக்கு இணையான தொழில்நுட்ப பின்புலத்துடன் செயலிகளை செயல்படுத்துவது என்பது அரசுக்கு ஒரு சவாலாகவே இருக்கும்  அரசு சார்ந்த பல திட்டங்கள் நாளடைவில் மந்தமாவது போல, பயணியரை ஈர்ப்பதில் தோல்வி ஏற்பட வாய்ப்பு துவக்கத்தில் குறைவான கட்டணத்துக்காக ஆதரவு கிடைக்கலாம்; ஆனால், குறைவாக கட்டணம் நிர்ணயித்தால், நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம் பி.எஸ்.என்.எல்., போல பல பொதுத்துறை நிறுவனங்கள் அரசு தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் சூழலில் இது ஒரு கூடுதல் சுமையாகவே அமையக் கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி