புதுடில்லி: சாலையோர வியாபாரிகளுக்கு கிரெடிட் கார்டு, வட்டி மானியத்துடன் கடன் வழங்க, பிரதமரின் ஸ்வாநிதி திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது செயல்பட துவங்கியதும் நடைபாதை வியாபாரிகள் எண்ணிக்கை உயர்ந்து, சாலை ஆக்கிரமிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.அமைப்புசாரா துறைகளை சேர்ந்த சிறுவணிகர்களுக்கு வங்கிகள் கடனுதவி வழங்க மத்திய அரசால், ஸ்வாநிதி திட்டம் கடந்த 2020ல் துவங்கப்பட்டது. இந்த கடனை, ஏராளமான சிறுவணிகர்கள் பெற்று பயன் அடைந்தனர்.தற்போது இத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளதாக தெரிகிறது. இதன்படி, 30,000 வரை செலவிடக்கூடிய கிரெடிட் கார்டை சாலையோர வியாபாரிகள் பெறலாம். துவக்கத்தில் பெறும் 10,000 முதல் 50,000 ரூபாய் வரையான வங்கிக்கடனை மூன்று முறை சரியான வகையில் திருப்பிச் செலுத்துவோருக்கு, இந்த கிரெடிட் கார்டு வழங்கப்பட உள்ளது. மேலும், கடனை முறையாக திருப்பிச் செலுத்துவோருக்கு, வட்டியில் மானியம் அளிக்கவும் திட்டம் வகை செய்கிறது. கிரெடிட் கார்டில் செலவிடப்படும் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவை வங்கிகள் தீர்மானிக்க அனுமதிக்கப்பட உள்ளது.மறுசீரமைக்கப்பட்ட ஸ்வாநிதி திட்டத்தில், சாலையோர வியாபாரிகளுக்கான கடன் தொகை 50,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் யு.பி.ஐ., இணைந்த கிரெடிட் கார்டும் வழங்கப்பட இருப்பதால், சிறுவணிகர்களின் நிதிநிலைத் தன்மையும், வியாபார வளர்ச்சிக்கு வாய்ப்புகளும் அதிகரிக்கும் என மத்திய அரசு கருதுகிறது.சாலையோர வியாபாரிகள் பயன்பெற இத்திட்டம் சிறப்பாக உதவும் என்ற போதிலும், இதனால், சாலையோர வணிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து, தெருக்களில் ஆக்கிரமிப்பு, போக்குவரத்து நெரிசல் என பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க அரசு என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க, ஸ்வாநிதி திட்டத்தை மத்திய அரசு 2020ல் துவக்கியது மறுசீரமைக்கப்பட்ட ஸ்வாநிதி திட்டத்தில் கடன் தொகை உயர்வு; ரூ.30,000 வரை கிரெடிட் கார்டு வசதி கடனை திருப்பிச் செலுத்துவோருக்கு, வட்டியில் மானியம் வழங்கவும் புதிய திட்டத்தில் ஏற்பாடு