மேலும் செய்திகள்
இன்று மீண்டும் கூடுகிறது சட்டசபை
01-Apr-2025
சென்னை : சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் வசமுள்ள துறைகளின், மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது. இதில், சட்டம் -ஒழுங்கு பிரச்னை உட்பட பல்வேறு மக்கள் பிரச்னைகளை, புள்ளி விபரங்களுடன் எடுத்துரைக்க, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இரண்டு நாட்களாக தயாரானதுடன், ஒத்திகை பார்த்துள்ளார்.சட்டசபையில் மார்ச் 14ம் தேதி பொது பட்ஜெட், 15ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. அதன்பின் பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. மார்ச் 24 முதல், துறைகளுக்கான மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்து வருகிறது. நாளை சட்டசபை கூட்டத் தொடர் நிறைவடைய உள்ள நிலையில், இன்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது.இவ்விரண்டு துறைகளும், முதல்வர் ஸ்டாலின் வசம் உள்ளன. எனவே, இன்றைய மானிய கோரிக்கையில், சட்டசபை கட்சி தலைவர்கள் அனைவரும் பேச அனுமதிக்கப்படுவர். இறுதியாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசுவார். அதற்காக, இன்று கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று சட்டசபை கூடியதும், எட்டு சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. அதன்பின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்கும். இன்றைய விவாதத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி, தமிழக சட்டம் - ஒழுங்கு பிரச்னை, டாஸ்மாக் ஊழல், அமைச்சர்கள் மீதான வழக்குகள், போதைப் பொருட்கள் நடமாட்டம், அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் போன்றவற்றை சட்டசபையில் எழுப்ப திட்டமிட்டு உள்ளார்.இதற்காக, கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த பெரிய அளவிலான கொலைகள், கொள்ளைகள், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஆகியவை குறித்த பட்டியலை தயார் செய்துள்ளார். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி குறித்தும், அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த சம்பவங்கள் குறித்தும் முதல்வர் குறிப்பிட்டு பேசினால், அதற்கு அளிக்க வேண்டிய பதில்களையும் தயார் செய்துள்ளார்.கடந்த இரண்டு நாட்களாக, சட்டசபையில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள், அரசியல் விமர்சகர்கள், செய்தியாளர்கள் ஆகியோருடன் கலந்து பேசி உள்ளார். சட்டசபையில் பேச தயார் செய்த விஷயங்களை, சட்டசபையில் எடுத்து பேசுவது குறித்து ஒத்திகையும் பார்த்து உள்ளார். அதேபோல், எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க, முதல்வரும், அமைச்சர்களும் தயாராகி உள்ளனர்.எனவே, இன்று சட்டசபையில் சூடு பறக்கும் விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
01-Apr-2025