புதுடில்லி: காங்கிரசின் சீனியர் தலைவர் அபிஷேக் மனு சிங்வி; இவர் பிரபல வக்கீலும் கூட. திரிணமுல் காங்கிரஸ் தரப்பிலிருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தவர். ஆனால், இவருக்கு மீண்டும் அந்த பதவி தர மம்தா மறுத்து விட்டார். இதனால், காங்கிரஸ் வேட்பாளராக ஹிமாச்சல பிரதேசத்திலிருந்து ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு போட்டியிட்டு, பா.ஜ.,விடம் தோல்வி அடைந்தார்.இவர், டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வழக்குகளில், உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானவர். 'என்னை ஆம் ஆத்மி கட்சி ராஜ்ய சபா எம்.பி.,யாக்க வேண்டும்' என, கோரிக்கை வைத்தார்.ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மலிவால், முதல்வர் கெஜ்ரிவாலின் செயலரால் தாக்கப்பட்டு, இந்த விஷயம் பெரிதானது. இவரை பதவி விலக வைத்து, அந்த பதவியை சிங்விக்கு கொடுக்க முயன்றார் கெஜ்ரிவால்; ஆனால், அது நடக்கவில்லை. இருப்பினும், எப்படியாவது எம்.பி., ஆக முயற்சித்துக் கொண்டிருந்தார்; இப்போது இவருக்கு அடித்தது யோகம்.பாரத் ராஷ்டிர சமிதி ராஜ்யசபா எம்.பி., கேஷவ் ராவ், சமீபத்தில் தெலுங்கானாவில் ஆட்சி செய்யும் காங்கிரசில் சேர்ந்தார்; அத்துடன், தன் எம்.பி., பதவியையும் ராஜினாமா செய்து விட்டார்; இவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருந்தது. இப்படி, காலியான இடத்தில் சிங்வி எம்.பி.,யாக விரும்புகிறார்; காங்கிரஸ் தலைமையும், இதற்கு ஒத்துக்கொண்டு விட்டது. 'விரைவில், கேஷவ் ராவ் விட்டுக் கொடுத்த ராஜ்யசபா பதவிக்கு சிங்வி வருவார்' என்கின்றனர் காங்கிரசார்.