வாசகர்கள் கருத்துகள் ( 2 )
படிப்பதற்கே வேதனையாக உள்ளது.
What about family lost their loved ones in kallakurichi, anyone covering.
பந்தலுார் : 'நாட்டில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்த தீபாவளி, வயநாடு மக்களுக்கு நடப்பாண்டு ஒளியை தரவில்லை,' என, நிலச்சரில் குடும்பத்தை இழந்த பெண் தெரிவித்தார்.தமிழகம்- கேரளா மாநில எல்லையில் உள்ள வயநாடு மாவட்டத்தில், சுற்றுலா பயணிகளை, மேப்பாடி மற்றும் வைத்திரி ஆகிய பகுதிகள் கவர்ந்துள்ளன.அப்பகுதிகளில் சூரல்மலை, முண்டக்கை மற்றும் புஞ்சரிமட்டம் பகுதிகளில் உள்ள அழகிய தேயிலை தோட்டம், அதற்கிடையே பாயும் ஆறு, அதனை ஒட்டிய அழகிய கிராமங்கள் ரம்மிய காட்சி அளிக்கும் பகுதிகளாக இருந்தன.--இப்பகுதிகள், ஜூலை, 30ல் நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சின்னாபின்னமானது. அதில், முண்டக்கை மற்றும் புஞ்சரிமட்டம் ஆகிய பகுதிகள் இருந்த சுவடு கூட தெரியாமல் காணாமல் போனது.சூரல்மலை பகுதியில் நுாற்றுக்கணக்கான வீடுகள், நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தன. இந்த சம்பவத்தில், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெற்றோர்; உடன் பிறந்தவர்கள் உயிரிழந்ததால், தப்பிய பலர் தனிமை படுத்தப்பட்டனர். அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத பலர் இன்னும் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். குடும்பத்தை இழந்து தவிக்கும் ஸ்ருதி
--அதில், ஒருவர் தான் ஸ்ருதி,24. சிவன்னா; -சபீதா தம்பதியின் மகளான இவர் கோழிக்கோட்டில் பணி புரிந்து வந்தார். ஜூலை, 30ம் தேதி காலையில் கண்விழித்த போது, 'தனது பெற்றோர் மற்றும் அருகில் இருந்த பெரியப்பா குருமல்லன், பெரியம்மா சாவித்திரி, சித்தப்பா சித்தராஜ், சின்னம்மா திவ்யா, அவர்களின் மகள் லட்சித், மற்றும் பேரப்பிள்ளை அஸ்வின்,' என, அனைவரும் உயிரிழந்த அதிர்ச்சி தகவலை அறிந்தார். குடும்பத்தில் மீதமிருந்தது, அவரின் சதோதரர்; சகோதரி; பாட்டி மட்டுமே.இதனை அறிந்து, இறுதி சடங்குக்கு வந்த ஸருதிக்கு ஆறுதலாக, அவரை திருமணம் முடிக்க நிச்சயம் செய்யப்பட்ட ஜெல்சன் மற்றும் பாட்டி மாதவி ஆகியோர் இருந்துள்ளனர்.
--இந்நிலையில், உயிரிழந்த உறவினர்களின், 40வது நாள் காரியம் நிறைவு பெற்ற நிலையில், அன்று மதியம் ஜெல்சன், ஸ்ருதி மற்றும் அவரது உறவினர்கள் எட்டு பேர் கோழிக்கோடு பகுதிக்கு, ஆம்னி வேனில் சென்ற போது, எதிரே வந்த டிப்பர் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. சுருதியின் உயிராக இருந்த ஜெல்சன் உயிரிழந்தார்.மேலும் அவரது பாட்டி மாதவி உள்ளிட்ட மீதம் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். தனக்காக இருந்த ஒரு 'உயிரும்' பறிபோன நிலையில், சுருதியின் காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பின் தற்போது கல்பட்டாவில் உள்ள வாடகை வீட்டில், தனது சகோதரி, சகோதரன், பாட்டியுடன் ஓய்வெடுத்து வருகிறார். கேளரா மற்றும் தமிழக மக்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறியும் வருகின்றனர். இவருக்கு வீடு கட்டி தர ஒரு தனியார் நிறுவனம் முன் வந்து, அதற்கான பூமி பூஜையும் நடந்தது. உதவி கரம் நீட்டிய கேரள அரசு
ஸ்ருதிக்கு கால் குணமான பின்னர், அரசு பணியும் வழங்க உள்ளதாக கேரளா அரசு அறிவித்துள்ளது, எந்த பிடிப்பும் இன்றி கிடந்த அவருக்கு ஆறுதலை தந்துள்ளது.ஸ்ருதி கூறுகையில், ''நிலச்சரிவு சம்பவத்தால் எனது குடும்பம் சிதைந்து போனது குறித்த ரணங்கள் எப்போது மறையும் என்று தெரியவில்லை. நாட்டில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்த தீபாவளி, வயநாடு மக்களுக்கு நடப்பாண்டு ஒளியை தரவில்லை. என்னை போன்ற துயரம் யாருக்கும் வரக்கூடாது என்ற பிரார்த்தனைகள் மட்டும் தான் தற்போது என்னிடம் உள்ளது,'' என்றார்.
படிப்பதற்கே வேதனையாக உள்ளது.
What about family lost their loved ones in kallakurichi, anyone covering.