உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வெளிநாடு செல்ல தி.மு.க.வினருக்கு தடை

வெளிநாடு செல்ல தி.மு.க.வினருக்கு தடை

'சட்டசபைத் தேர்தல் முடியும் வரை, வெளி நாடுகளுக்கு செல்ல வேண்டாம்' என தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு, தி.மு.க.,வை தயார்படுத்தும் வகையில், 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில், 'ஒன் டூ ஒன்' நிகழ்ச்சி வாயிலாக, சென்னை அறிவாலயத்தில் சட்டசபை தொகுதி நிர்வாகிகளை நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வருகிறார். அந்த வகையில், இதுவரை, 150க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளின் நிர்வாகிகளை சந்தித்துள்ளார். இந்நிலையில், தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சியின் மா.செ.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த நாலரை ஆண்டுகளில் தி.மு.க., அரசு, நிறைய மக்கள் நலத் திட்டங்களை தீட்டி, அதை முறையாக நிறைவேற்றி இருக்கிறது. சொல்லப்போனால், ஆட்சி வாயிலாக நிறைய சாதனைகள் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவற்றையெல்லாம் கட்சியின் மா.செ.,க்களும் எம்.எல்.ஏ.,க்களும் தொகுதி பொறுப்பாளர்களும் முறையாக கொண்டு சேர்க்கவில்லை. இதனால், தி.மு.க., மீதான ஈர்ப்பு பொதுமக்களுக்கு குறைந்துவிட்டதாக, பல்வேறு கருத்துக்கணிப்புகள் வாயிலாக தி.மு.க., தலைமை கண்டறிந்துள்ளது. அதேபோல, கட்சித் தொண்டர்களையும் பொதுமக்களையும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அரவணைத்து செல்ல வில்லை என்ற குற்றச்சாட்டு தமிழகம் முழுதும் உள்ளது. தி.மு.க., ஆட்சியின் மீது ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் ஆதரவு எப்படி உள்ளது; மக்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதையெல்லாம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள் கேட்டறியாமல் உள்ளனர். இதையெல்லாம் விரைந்து சரி செய்ய வேண்டும் என முதல்வர் நினைக்கிறார். அதனால், அமைச்சர்கள், மா.செ.,க்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் தேர்தல் முடியும் வரை வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது எனஉத்தரவிட்டுள்ளார். துறை சார்ந்து வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு மட்டும் அமைச்சர்கள் வேண்டுமானால், கட்சி தலைமையின் உரிய அனுமதி பெற்று செல்லலாம். ஆனால் மற்றவர்கள், தொடர்ந்து தொகுதி மக்களை சந்திக்க வேண்டும். அவர்கள் குறைகளை கேட்டு களைய வேண்டும். அரசு நிறைவேற்றிய திட்டப் பலன்களை, மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கட்சிக்குள் மாவட்டம் தோறும் இருக்கும் கோஷ்டி பூசல்கலையும் உடனடியாக தீர்க்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கட்சியின் கோஷ்டி பூசலை தீர்க்கும் விவகாரத்தில், பொறுப்பு அமைச்சர்களால் தீர்வு காண முடியாதவர்கள், மண்டல பொறுப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அவர்கள் அப்பிரச்னையை தீர்த்து வைப்பர். அவர்களாலும் முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டால் தான், தலைமை நிலைய நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். கட்சி பிரச்னைகள் அனைத்தும், இம்மாதம் இறுதிக்குள் தீர்வு காண வேண்டும். பொதுமக்கள் தெரிவிக்கும் அனைத்து கோரிக்கைகளையும் உரிய அதிகாரிகள் மற்றும் கலெக்டர் கவனத்துக்குக் கொண்டு சென்று, ஒவ்வொன்றையும் தீர்க்க வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., எதிர்பார்த்த வெற்றியை பெறும் என முதல்வர் கூறியுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. - நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை